விடுதலை, வாடிவாசல் , வடசென்னை படத்தைத் தொடர்ந்து தனது அடுத்தப் படம் விஜய்யுடன் இருக்கலாம் என தெரிவித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் வெற்றிமாறன். இவர் பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறார். இதனிடையே அவர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டையும் நடத்தினார். இந்நிலையில் தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், வடசென்னை இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறினார்.
தொடர்ந்து அதற்கு முன் இரண்டு ஒப்பந்தங்கள் உள்ளன. அதை முடித்துவிட்டு வடசென்னை 2 இயக்குவேன் எனத் தெரிவித்தார். இதற்கிடையில் விஜய்யை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளேன். இது குறித்து நானும் விஜய்யும் தொடர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறோம். தற்போது காத்திருப்பில் இருக்கும் படங்கள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு நான் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் வெற்றிமாறன் தெரிவித்தார்.







