மீண்டும் ஒரு உண்மை சம்பவமா? ’தி கேரளா ஸ்டோரி’ இயக்குநரின் அடுத்த படம்!

தி கேரளா ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சுதிப்தோ சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல் ஷா ஆகியோர் தங்கள் அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால்…

தி கேரளா ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் சுதிப்தோ சென் மற்றும் தயாரிப்பாளர் விபுல் ஷா ஆகியோர் தங்கள் அடுத்த படம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ கடந்த மே 5-ம் தேதி வெளியானது. தென்மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் சுமார் 32,000 பெண்களின் பின்னணியில் உள்ள நிகழ்வுகளை கண்டுபிடிப்பு என்ற பெயரில் இப்படம் வெளியானது.

இந்தத் திரைப்படத்தில் கேரளத்தில் ஹிந்து பெண்கள் கட்டாயத்தின்பேரில் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடு கடத்தப்படுவதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், ஒரு சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரையிடலுக்குத் தடை விதிக்கப்பட்டது. எனினும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு மீண்டும் திரையிடப்பட்டது. நாடு முழுவதும் இந்த திரைப்படம் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சுதிப்தோ சென் மற்றும் விபுல் அம்ருத்லால் ஷா இணைந்து ‘பஸ்தர்’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர். மேலும், இந்த திரைப்படமானது மறைக்கப்பட்ட உண்மை சம்பவம் குறித்தது என்று போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் குறித்த திரைப்படமாக இது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது அடுத்தாண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.