பாஜகவுடன் கூட்டணியில் உள்ள அதிமுக ஆட்சிக்கு வருவது பற்றி விஜய்க்கு கவலையில்லை – விசிக தலைவர் திருமாவளவன்..!

பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் விஜய்க்கு கவலையில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாதக, தவெக, ராமதாஸ்- சசிகலா அணி என பல்முனை போட்டியாக இருந்த தேர்தல் களத்தில் யார் வெற்றி பெற்று அரியணை ஏற போகிறார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில் நேற்று முன்தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது. அதில், பெரும்பாலானவை திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றும் ஒரு சில கருத்துக்கணிப்புகள் அதிமுக ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிவித்து இருந்தன. ஒரே ஒரு கருத்துக்கணிப்பு மட்டுமே தவெக ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது;

தேர்தலில் விசிக போட்டியிடாத ஒரு சில தொகுதிகளில் விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைப்பு தரவில்லை என மீது புகார் வந்துள்ளது. கூட்டணி கட்சியினருக்கு ஒத்துழைக்காத விசிகவினர் குறித்து தகவல் திரட்டப்படுகிறது.

திமுக கூட்டணி பெரும் வெற்றி பெறும். திமுக, அதிமுக எதிர்ப்பு வாக்குகளை விஜய் பிரித்திருக்கிறார். ஆனால் ஆட்சியை கைப்பற்றும் தனித்த சக்தியாக வலிமை பெற இயலாது. பாஜக அங்கம் வகிக்கும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் விஜய்க்கு கவலையில்லை. பாஜகவை கொள்கை எதிரி என்பதை தவிர விஜய் வேறு எதுவும் சொல்வதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.