காதலுக்கு மரியாதை செய்து கோட்டை அமைத்த விஜய், அஜித்

தமிழ் திரையுலகில் பல மாஸ் ஹீரோயிச படங்களில் விஜய், அஜித் நடித்திருந்தாலும், 90களில் அவர்கள் திரையுலகிற்கு வந்த புதிதில் இருவரையும் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது அவர்கள் நடித்த காதல் படங்கள்தான். விஜய் மற்றும் அஜித்தின்…

தமிழ் திரையுலகில் பல மாஸ் ஹீரோயிச படங்களில் விஜய், அஜித் நடித்திருந்தாலும், 90களில் அவர்கள் திரையுலகிற்கு வந்த புதிதில் இருவரையும் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது அவர்கள் நடித்த காதல் படங்கள்தான். விஜய் மற்றும் அஜித்தின் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய காதல் காவியங்களை இந்த காதலர் தினத்தில் ஒருமுறை திரும்பிப்பார்ப்போம்.

பூவே உனக்காக

”அதெல்லாம் கம்முபோட்டு ஒட்டிக்கலாம்பா” என மாஸ் ஹீரோ விஜய் , அந்த இளம் ஹீரோ விஜய் பேசிய காதல் வசனத்தை வாரிசு படத்தில் கலாய்த்தாலும், மாஸ் ஹீரோ விஜய் உருவாவதற்கு அஸ்திவாரம் போட்டது அந்த இளம் ஹீரோ விஜய் பேசிய காதல் வசனங்களும், பூவே உனக்காக போன்று அவர் நடித்த மென்மையான காதல் படங்களும்தான். ”காதல்ங்கிறது பூ மாதிரி ஒரு தடவ உதிர்ந்ததுன்னா திரும்பவும் எடுத்து ஒட்ட வைக்க முடியாது” என பூவே உனக்காக  படத்தில் விஜய் பேசிய வசனமும், மனதை வருடம் பின்னணி இசை ஒலிக்க விஜய் அதை பேசிய விதமும்,  90களில் கல்லூரி இளைஞர்கள், இளம் பெண்களின் உள்ளத்தை உருக்கியது. ரசிகன், தேவா, விஷ்ணு போன்ற கமர்ஷியல் மசாலா படங்களில் என்னதான் விஜய் தனது திறமையை காட்டியிருந்தாலும் தமிழ் திரையுலக ரசிகர்களின் நெஞ்சில் விஜய் குடியிருக்க அஸ்திவாரம் போட்டது பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற மென்மையான காதல் படங்கள்தான். அதிலும் குறிப்பாக பூவே உனக்காக விஜயின் திரையுலக வாழ்க்கையில் முதல் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம். ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை விக்ரமன் எழுதி இயக்கியிருந்தார். 1996ம் ஆண்டு பிப்ரவரி 18ந்தேதி வெளியான பூவே உனக்காக விஜயின் திரையுலக வாழ்க்கையில் அவர் கொடுத்த முதல் வெள்ளி விழா படமாக அமைந்தது. 250 நாட்களுக்கும் மேல் ஓடி வசூல்வேட்டை நடத்தியது. இயக்குநர் விக்ரமனுக்கே உரிய இதமான காட்சியமைப்புகளோடு காதலின் உன்னதத்தை பேசிய இந்த படத்தை எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசை மேலும் உணர்வுப்பூர்வமாக்கியது.  ”மழை சுடுகின்றதே அடி அது காதலா… வெயில் குளிர்கின்றதே அடி இது காதலா…இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா” என்ற கவிஞர் வைரமுத்து வரிகளை தாங்கிய சொல்லாமலே யார் பார்த்தது பாடலும்,  அவர் எழுதிய ”மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்” என்கிற வரிகளை தாங்கிய ஆனந்தம் ஆனந்தம் பாடலும் காதலர்களின் இதயங்களில் 25 ஆண்டுகளை கடந்தும் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கிறது.

காதலுக்கு மரியாதை

தமிழ் சினிமாவில் விஜயின் மார்க்கெட்டை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்ற காதல் காவியம் காதலுக்கு மரியாதை. மலையாளத்தில் தான் இயக்கிய அனியாத்திபிரவு படத்தை தமிழில் எடுக்க இயக்குனர் பாசில் முடிவெடுத்தபோது இந்த படத்தில் நடிக்கும் அதிர்ஷ்டம் முதலில் அப்பாஸைத்தான் தேடிச் சென்றிருக்கிறது. ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அப்பாஸ்க்கு அந்த வாய்ப்பு நழுவியது. பின்னர் விஜய் அந்த படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தமாகியிருக்கிறார். திரைப்படங்களில் காதல் காட்சிகளில் எல்லைமீறும் கவர்ச்சி எட்டிப்பார்த்த அந்த நேரத்தில் பாசில் தனக்கே உரிய பாணியில் மிகவும் டீசண்டாக காதல் காட்சிகளை நகர்த்தி காதலுக்கு மரியாதை சேர்த்தார். காதல் படங்கள் என்றாலே  கிளைமாக்ஸ் ஒன்று சோகமாக இருக்கும் அல்லது அதிரடி சண்டைக்காட்சிகளின் துணையோடு சுபமாக முடியும் என்கிற இரண்டு கோணங்களில்தான் படங்கள் வந்த நேரத்தில் இந்த இலக்கணத்தை உடைத்து புதுமையான முறையில் கிளைமாக்ஸ் அமைத்திருந்தார் பாசில். தன்னை தேடி வந்த காதலியை பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ய மணம் இல்லாத காதலன், காதலியை அவரது வீட்டிற்கே அனுப்பி வைப்பார். இதனால் மனம் நெகிழ்ந்து கிளைமாக்சில் காதலியின் பெற்றோர் எடுக்கும் முடிவு காதல் திரைப்படங்களுக்கு புதிய மரியாதை சேர்த்தது. விஜய் மற்றும் ஷாலினியின் மென்மையான நடிப்பு படத்திற்கு பெரும் பலம் சேர்த்தது. நடிகர் சங்கிலி முருகன் தயாரித்த இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். 90களில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த மெஹா ஹிட் பாடல்களில் காதலுக்கு மரியாதை பாடல்களும் அடங்கும். குறிப்பாக பழனிபாரதி வரிகளை தாங்கி வந்த ”என்னை தாலாட்ட வருவாளா”  ”ஒரு பட்டாம்பூச்சு நெஞ்சுக்குள்ளே”  போன்ற பாடல்கள் காதலர்களின் நெஞ்சை தாலாட்டின. இளையராஜா இசை என்றென்றும் இளமையாக இருக்கும் என்பதை 1997ம் ஆண்டு வெளிவந்த காதலுக்கு மரியாதை பாடல்களும் நிரூபித்தன. 1997ம் ஆண்டு டிசம்பர் 19ந்தேதி வெளிவந்த காதலுக்கு மரியாதை விஜய்க்கு ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

ஆசை

1993ம் ஆண்டு தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான அஜித், 2001ல் வெளிவந்த தீனா படம் மூலம் ஆக்ஷன் நாயகனாக மாஸ் ஹீரோவாக ஜொலிக்கத் தொடங்குவதற்கு முன்பாக அவருக்கு பெரிதும் கைகொடுத்தது காதல் பாடங்கள்தான். 1993ம் ஆண்டு அவர் அறிமுகமான அமராவதி படமே ஒரு உருகவைக்கும் காதல் கதைதான். 1993ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டுவரை ஏராளமான ரொமாண்டிக் படங்களில் நடித்துள்ளார். அதில் இரண்டு படங்கள் மிகவும் தனித்துதெரியும். ஆசை, காதல் கோட்டை என்கிற அந்த இரண்டு படங்கள் அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படங்களாக அமைந்தன. இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தில் 1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ந்தேதி வெளியான ஆசை படத்தின் மூலம் அஜித்திற்கு இளம் ரசிகைகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்தது. இளைஞர்கள் மனதில் அஜித் என்கிற ஆலமரத்தின் விதை ஊன்றப்பட்டத்து ஆசை படத்திலிருந்து என்று சொன்னால் அது மிகையாகாது. இளளை துள்ளலுடனும், குறும்புடனும் இந்த படத்தில் காதல் காட்சிகளில் அஜித், சுவலட்சுமி ஜோடி அசத்தியிருப்பார்கள். தேவா இசை மிகவும் நவீனமாக இந்த படத்தில் தெரிந்தது. குறிப்பாக அந்த மீனம்மா  பாடல் காதலர்களின் நெஞ்சங்களை  காஷ்மீர் பனிக் குவியலுக்குள் இருப்பது போல் குளிர்வித்தன. மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக்கொண்ட போதும் காதல் மட்டும் காயமின்றி வாழும் என்று கவிஞர் வைரமுத்து எழுதிய வைர வரிகள் அந்த பாடலுக்கு பெரும் பலம் சேர்த்தன. அஜித்தின் வெற்றிப்படங்களின் பட்டியலில் ஆசையும் இடம் பிடித்துள்ளது.

 காதல் கோட்டை

ஆசை, வான்மதி, கல்லூரி வாசல் என இளம் ஹீரோவாக, சாக்லேட் பாயாக காதல் டூயட் பாடிக்கொண்டிருந்த அஜித்தின் திரையுலக வாழ்க்கையில்,  1996ம் ஆண்டு வெளிவந்த காதல் கோட்டை என்கிற காதல் காவியம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த வருடத்தின் தொடக்கத்தில் விஜயின் பூவே உனக்காக வெளிவந்த  நிலையில், வருடத்தின் மத்தியில் அஜித் தனது பங்கிற்கு ஒரு காதல் காவியத்தை கொடுத்தார். கதாநாயகனும், கதாநாயகியும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதலிக்கும்  கதையம்சத்தை கொண்ட காதல் கோட்டை அதுவரை காதல் படங்களுக்கு என நிர்ணயிக்கப்பட்டிருந்த அத்தனை இலக்கணங்களையும் உடைத்தெறிந்து புதிய சரித்திரம் படைத்தது. தற்காலத்தில் முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் மலரும் காதலுக்குகூட புகைப்பட பரிமாற்றங்கள் தேவைப்படும். ஆனால் அந்த புகைப்பட பரிமாற்றத்தை கூட காதலின் புனிதத்தை உணர்த்துவதற்காக தவிர்க்கும் உன்னதமான காதல் ஜோடிகளாக அஜித்தும், தேவயானியும் இந்த படத்தில் நடித்திருப்பார்கள். இந்த புதுமையான சிந்தனைக்காக 3 தேசிய விருதுகளை பெற்றது காதல் கோட்டை. தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை காதல் கோட்டை பெற்றது. சிவசக்தி பாண்டியன் தயாரித்த இந்த படம் மூலம் தேசிய அளவில் சிறந்த இயக்குநருக்கான விருதையும், சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான விருதையும் அகத்தியன் பெற்றார். தேவா இசையில் பாடல்கள் தேன்சிந்தின. குறிப்பாக கண்ணும் கண்ணும் மோதுமம்மா, நெஞ்சம் மட்டும் பேசுமம்மா  என்கிற வரிகளோடு படத்தின் டைட்டிலேயே காலமெல்லாம் காதல் வாழ்க என காதலுக்கு தன் பங்கிற்கு மரியாதை சேர்த்திருந்தார் அகத்தியன். அவர் எழுதிய நலம் நலம் அறிய பாடலில் வரும் நீ இங்கு சுகமே, நான் அங்கு சுகமா என்கிற வரிகள் காதல் என்கிற உணர்வின் ஆழத்தை உணர்த்தின. 1996ம் ஆண்டு ஜூலை 12ந்தேதி வெளியான காதல் கோட்டை  காதலர்கள் கொண்டாடிய காவியமாக 250 நாட்களுக்கு  மேல் ஓடி  பெரும் வெற்றி பெற்றது.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.