முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம்

ஆட்டத்தைத் தொடங்கிய கந்தசாமி ஐபிஎஸ்


த.எழிலரசன்.

கட்டுரையாளர்

லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் கந்தசாமி தனது முதல் அசைன்மென்டை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து தொடங்கியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. இதனை அரசியல் காழ்ப்புணர்வு என விமர்சித்துள்ள அதிமுக, எந்தவித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயார் எனவும் தெரிவித்துள்ளது.

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது அனைத்து இடங்களிலும், மு.க.ஸ்டாலின் அழுத்தமாக முன்வைத்த ஒரு வார்த்தை, “அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் விசாரிக்கப்படும்” என்பதுதான்.
அதன்படி, திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற அடுத்த சில நாட்களில் லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டார் கந்தசாமி. அதிரடிகளுக்கு பெயர்போன கந்தசாமி லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை இயக்குனராக நியமிக்கப்பட்டது, அதிமுக அமைச்சர்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கவே என, அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டன.

யார் இந்த கந்தசாமி, இவரை கண்டால் ஏன் அரசியல் மற்றும் அதிகார மட்டங்களே நடுங்குகின்றன என கேள்விகளும் எழுந்தன. 1989 ஆம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான கந்தசாமி, முதுகலை பட்டப்படிப்பை கலிபோர்னியா பல்கலைக் கழகத்திலும், பி.ஹெச்டி ஆய்வுப் படிப்பை சென்னை ஐஐடியிலும் முடித்தவர். மதுரை காவல் கண்காணிப்பாளர் உள்பட பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டவர். அயல் பணிக்காக சிபிஐக்கு மாற்றலான கந்தசாமி சென்னையில் சிபிஐ டிஐஜியாகவும், மும்பையில் சிபிஐ இணை இயக்குனராகவும் பணியாற்றி அதிரடிகளை நிகழ்த்தினார்.

முடிக்கப்படாத பல முக்கிய வழக்குகளின் ஆதாரங்களை திரட்டி முடித்து வைத்த கந்தசாமி விசாரித்த வழக்குகளில் இன்றளவும் பேசப்படுவது தற்போதைய உள் துறை அமைச்சர் அமித்ஷாவை கைது செய்ததுதான். 2010ஆம் சொராபுதின் என்கவுண்டர் வழக்கில் குஜராத் அமைச்சராக பதவி வகித்த அமித்ஷாவை, வாரண்டுடன் கைது செய்தார் கந்தசாமி. சிபிஐ அலுவலகத்தில் கற்கள் பறந்துகொண்டிருந்த நேரத்திலும் துணிச்சலாக அமித்ஷாவிடம் விசாரணை நடத்தினார் கந்தசாமி. அதன்பின்னர் அமித்ஷா ஜாமீனில் வெளியே வந்தார்.

சிபிஐ டிஐஜியாக இருக்கும்போது கந்தசாமி விசாரித்த முக்கியமான வழக்குகளில் ஒன்று கேரளாவில் லாவலின் விவகாரம். 1997ஆம் ஆண்டு கேரள மின்சாரத் திட்டத்திற்காக கனடா நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியதில், 375 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய கேரள மின்சாரத் துறை அமைச்சர் பினராயி விஜயன் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர், அந்த வழக்கிலிருந்து பினராயி விஜயன் விடுவிக்கப்பட்டார். அந்த வழக்கை விசாரித்தவரும் கந்தசாமிதான்.

சிறப்பான சேவைக்காக 2006ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதக்கம் பெற்ற கந்தசாமி, பொதுமக்கள் சேவையில் சிறந்து விளங்கியதற்காக 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கம் பெற்றார். தற்போது தமிழ்நாட்டில் கந்தசாமி தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை, இன்னும் பல அதிரடிகளை நடத்தக் காத்திருப்பதாகவே கூறுகிறது காவல் துறை வட்டாரங்கள்.

 

 

Advertisement:

Related posts

உடலுக்கு கேடு தரும் உணவுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த இங்கிலாந்து!

Jayapriya

சு.வெங்கடேசனின் கோரிக்கையை ஏற்ற சிபிஎஸ்இ!

Niruban Chakkaaravarthi

தூத்தூர் மீனவ குடும்பங்களுக்கு நிவாரண உதவி: கமல் கோரிக்கை

Saravana Kumar