குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்களித்தார் பிரதமர் நரேந்திர மோடி!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது.

கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் விளக்கம் அளித்திருந்தார்.

இதையடுத்து புதிய குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்காக தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. இதையடுத்து பாஜக கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி. பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில், தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த மாதம் இருவரும் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

நாட்டின் அடுத்த குடியரசு துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணி தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் எப்-101 அரங்கில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் முதல் நபராக பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.