நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்கினார்
67வது தேசிய திரைப்பட விருதுகள், 2019 ஆம் ஆண்டு வெளியான மற்றும் அந்த ஆண்டில் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு இன்று வழங்கப்பட்டு வருகிறது. குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கி வருகிறார். இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு, தாதா சாஹேப் பால்கே விருதை அவர் வழங்கினார்.
45 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றி வரும் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை இதற்கு முன், லதா மங்கேஷ்கர், அமிதாப் பச்சன், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், நடிகர் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் உள்பட பலர் பெற்றுள்ளனர்.
விருதுபெற்ற பின் பேசிய ரஜினிகாந்த், இந்த விருதை தன் குருநாதர் கே.பாலசந்தருக்கு அர்ப்பணிப்பதாகச் சொன்னார். அவர் பேசும்போது, இந்த விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. விருதை எனது குருவான பாலசந்தருக்கு அர்ப்பணிக்கிறேன். என்னை இந்த துறைக்கு கொண்டு வந்த சக நண்பனான பேருந்து நடத்துனர் ராஜ் பகதூருக்கு நன்றியை தெரிவிக்கிறேன், அவர்தான் என்னை ஊக்குவித்தார். அனைத்தையும் தாண்டி என்னை வாழ வைத்த என் தமிழ் மக்களுக்கு நன்றியை உரித்தாக்குகிறேன் என்றார்.







