சென்னையில், மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழையை எதிர்கொள்ள தயார்நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கனமழையை எதிர்கொள்ளும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதியில் படகுகளும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர், பால் மற்றும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என சென்னை மக்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.








