இஸ்லாமிய உள் ஒதுக்கீடு தீர்ப்பு: மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு!

இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ சாதிச்சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்ஹி மற்றும் சித்தார்த் லூத்ரா ஆஜராகி வாதிட்டனர். வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மதம் மாறி இஸ்லாத்தை தழுவியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ சாதிச்சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணையையே உறுதி செய்து அதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “இஸ்லாம் மதம் தழுவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு உடனடியாகச் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். சமூகரீதியான பின்னடைவு (social backwardness) ஒரு நாளிலோ ஒரு தலைமுறையிலோ ஏற்படுவதல்ல. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்த சமூகக் கட்டமைப்பினால் அடைந்தது. மதம் மாறுவதாலேயே அது மறைந்துவிடுவதில்லை.

இதுவே சமூக யதார்த்தமாக இருக்கும் நிலையில், “இஸ்லாமைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு BC பிரிவுக்கான இட ஒதுக்கீடு அளிக்கத் தேவையில்லை” எனும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு உடனடியாக இத்தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் இருந்து இஸ்லாம் மதத்தை ஏற்பவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

கடந்த திமுக அரசில், கிறித்தவர்களாக மதம் மாறும் ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒன்றிய அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்த முயற்சிகளையும் தற்போதைய தமிழ்நாடு அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். சாதியினால் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட BC, MBC, SC மக்களுக்கு அதனையே அளவுகோலாகக் கொண்டு இட ஒதுக்கீடு அளிப்பதுதான் சமூகநீதிக்கு வழிவகுக்கும். பின்பற்றும் மதத்தைக் காரணம் காட்டி அந்த உரிமையை மறுப்பது சமூக அநீதியாக அமைந்துவிடும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.