பெரும் கனவுகளை நனவாக்க முடியும் என உலகிற்கு நிரூபித்துக்காட்டியவர் பிரதமர் நரேந்திர மோடி என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பான, மோடி அட் 20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி என்ற புத்தகம் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில், வெங்கைய்யா நாயுடு புத்தகத்தை வெளியிட்டார்.
பின்னர் பேசிய அவர், நவீன இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தனித்தன்மை வாய்ந்த தலைவர் ஒருவரின் பல்வேறு பரிமாணங்களை வாசகர்களிடம் பகிரும் அரிய தொகுப்பாக இந்த புத்தகம் உள்ளது என குறிப்பிட்டார்.
சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் பிரதமர் நரேந்திர மோடி என தெரிவித்த வெங்கைய்யா நாயுடு, சுதந்திரத்திற்குப் பிறகான நாட்டின் வரலாற்றில் அவருக்கு தனி இடம் இருக்கும் வகையில் அவரது கடந்த 20 ஆண்டு கால பொதுவாழ்வு உள்ளதாகக் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்தார்.
சுாமர் 13 ஆண்டு காலம் முதலமைச்சராகவும், கடந்த 8 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராகவும் இருந்து வரும் நரேந்திர மோடி, அரிதான தலைவர் என வெங்கைய்ய நாயுடு குறிப்பிட்டார். சிறப்பான சிந்தனை, வழிகாட்டும் தன்மை, நேர்மறையான துடிப்பான அணுகுமுறை, மாற்றத்தை ஏற்படுத்தும் தலைமைப் பண்பு ஆகியவற்றை நரேந்திர மோடி கொண்டிருப்பதாகத் தெரிவித்த வெங்கைய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடியின் கனவு மற்றும் அவற்றை அவர் எந்த அளவு நனவாக்கி உள்ளார் என்பது புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் வேண்டிய ஒன்று என கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிலநடுக்கத்தால் சிதைந்து போயிருந்த குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது, அவருக்கு எந்த முன் அனுபவமும் இருந்திருக்கவில்லை என குறிப்பிட்டார். இருந்தபோதிலும், மிகச் சிறப்பாக செயல்பட்டு, மாநிலத்தை முன்னேற்றி, தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்றவர் நரேந்திர மோடி என அவர் கூறினார்.
தீவிரவாதம் குறித்த சர்வதேச விவாதத்தை நரேந்திர மோடி அரசு கடந்த 8 ஆண்டுகளாக வழிநடத்தி வருவதாக நிகழ்ச்சியில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட அரசியல் காரணமாகவும், எல்லையில் கட்டமைப்புகளை வலுப்படுத்தியதன் காரணமாகவும், நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வர்த்தகத்தை வளர்த்தெடுக்கவும், ஏற்றுமதியை பெருக்கவும் பிரதமர் மேற்கொண்டு வரும் முன்னெடுப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றார்.
Advertisement: