வருகின்ற 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வுகள் எழுத வரும் தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று TNPSC அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 போன்ற தேர்வுகள் மூலம் தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகின்றன. அதன்படி தமிழ்நாடு அரசில் குரூப் 2, 2ஏ பிரிவில் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள 5,529 பணி இடங்களை நிரப்புவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 வரை நடைபெற்றது. அதில் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குரூப் 2, 2A தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதற்கான முதல்நிலை தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறும் என TNPSC அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வு எழுதுபவர்களுக்கான ஹால் டிக்கெட்டுக்களை இன்று முதல் http://www.tnpsc.gov.in மற்றும் http://www.tnpscexams.in என்ற இரண்டு இணையதளங்களில் தங்களின் OTR மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் இன்று காலை அறிவித்திருந்தது.
இந்நிலையில் வரும் 21-ம் தேதி நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ தேர்வுகள் எழுத வரும் தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று TNPSC அறிவித்துள்ளது.
மேலும் முகக்கவசம் அணிந்து வருவோரை மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி செய்ய TNPSC உத்தரவிட்டுள்ளது.
தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும் மற்றும் தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதோடு தேர்வு எழுத வரும் தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணியவும் TNPSC தடை விதித்துள்ளது.
– சத்யா விஸ்வநாதன், மாணவ ஊடகவியலாளர்








