முக்கியச் செய்திகள் தமிழகம்

“காற்றாலை மூலம் 25% மின் தேவை பூர்த்தியாகிறது”

தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மொத்த மின் தேவையில் 25 சதவீதம் அளவில் காற்றாலை மூலம் மின் தேவை பூர்த்தியாவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மதுரை மண்டலம் ஈரோடு மண்டலம் என இரண்டு மண்டலங்களில் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், தென் தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் காற்றின் வேகம் கடந்த 2 நாட்களாக அதிகமாக உள்ளது. இதனால் காற்றாலை மின் உற்பத்தி 4 ஆயிரத்து 300 மெகாவாட்டை தாண்டி உள்ளது காற்றாலை மின் உற்பத்தி மூலம் தமிழக மின் தேவையில் 25 சதவீதம் பூர்த்தி ஆகிறது.

 

தமிழகத்தில் கோடை வெயிலின் உக்கிரம் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை கடுமையாக இருந்து வந்தது. இதன் காரணமாக மின் தேவை 17 ஆயிரத்து 500 மெகாவாட் அளவிற்கு அதிகரித்தது பெரும்பான்மையான மின் தேவைகள் அனல் மின்சாரம் மூலமாகவே பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. நிலக்கரி தட்டுப்பாடு, தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள அலகுகள் தொடர்ந்து மின் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அலகில் மின் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் தேவையை சரியாக பூர்த்தி செய்வதில் சிரமம் இருந்து வந்தது. எனினும் தமிழ்நாடு அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் குளிர்ந்த சூழல் நிலவுவதால், திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அசானி புயல் காரணமாக மழை பொழிவு ஏதும் இல்லாத நிலையிலும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

 

மதுரை மண்டலத்தில் திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி நாகர்கோவில் சாலையில் பணகுடி ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காற்றாலை மின் உற்பத்தியில் முதன்மை இடத்தை பெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சீவலப்பேரி,கங்கைகொண்டான், தூத்துக்குடி மாவட்டத்தில் கயத்தார் உள்ளிட்ட பகுதிகளில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 500 மெகாவாட்டிற்கும் குறைவாக இருந்த காற்றாலை மின் உற்பத்தி இன்று 4 ஆயிரத்து 389 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

வழக்கமாக ஜூன் முதல் அக்டோபர் வரை தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் அச்சமயத்தில் காற்றாலை மின் உற்பத்தி 5 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் சுமார் 10,000 காற்றாலைகள் மின்னு உற்பத்தியில் தொடர்ந்து ஈடுபடும். ஆரியங்காவு கணவாய் ஆரல்வாய்மொழிப் பகுதியில் உள்ள கணவாய் ஆகியவற்றின் காரணமாக காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் இப்பகுதிகளில் காற்றாலைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டது. அதிகபட்சமாக 7 ஆயிரத்து 600 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் இன்று 4 ஆயிரத்து 389 மெகா வாட் உற்பத்தி செய்யப்பட்டு தமிழக பவர் கிரிட்களில் இணைக்கப்பட்டுள்ளது.

 

காற்றின் வேகம் தொடர்ந்து இதே நிலையில் நீடித்தால் மின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.வெயிலின் தாக்கம் குறைந்துள்ளதாலும் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதாலும் மின் தேவை 14 ஆயிரத்து 500 மெகா வாட்டாக குறைந்துள்ளது. தற்போதைய மின் தேவையில் காற்றாலை மின் உற்பத்தி மூலம் 25 சதவீத தேவையை பூர்த்தி செய்ய முடிகிறது. காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் தூத்துக்குடியில் அனல் மின் நிலையத்தின் ஐந்து அலகுகளில் ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 1, 150 மெகாவட் உற்பத்தி செய்யப்படும் நிலையில் தற்போது தூத்துக்குடி அனல் நிலையத்தில் முதல் அலகில் 175 மெகா வாட் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையங்களில் 4 ஆயிரத்து 320 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில் மின் தேவை குறைந்துள்ளதால் ஆயிரத்து 600 மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. குளிர்ந்த சூழல் நிலவுவதாலும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதாலும் தமிழக மின் தேவை கணிசமாக குறைந்துள்ளது காற்றாலை மின் உற்பத்தி மதுரை மண்டலத்தில் 3079 மெகாவாட்டையும் ஈரோடு மண்டலத்தில் ஆயிரத்து 431 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

பங்கு சந்தை முதலீடு: கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை

Halley Karthik

பள்ளி பேருந்தில் மோதிய கார்; 3 பேர் உயிரிழப்பு

Saravana Kumar

வடிவேலு பாணியில் வாய்க்காலை காணவில்லை: ஊர் மக்கள் புகார்

Vandhana