வேங்கைவயல் விவகாரம் – அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு மேலும் 1 மாத காலம் அவகாசம்!

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில்…

வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டிருப்பதாக கடந்த 2022 டிசம்பர் 26-ம் தேதி தெரியவந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாத அவகாசம் வேண்டும் என சிபிசிஐடி போலீசார், புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில் இதற்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற மனுமீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்த நிலையில், மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்டம் நீதிமன்றத்தில், புதுக்கோட்டை மாவட்ட சிபிசிஐடி போலீசார் ஒரு மாத காலம் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்து அவகாசம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.