முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சினிமா

வாரிசு vs துணிவு: களை கட்டிய கொண்டாட்டங்கள்…கவலை அளித்த ரகளைகள்…


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

தமிழ் திரையுலகின் திருவிழா போல் விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு படங்களின் வெளியீடு அரங்கேறியுள்ளது.  அதே நேரம் ஆங்காங்கே நடைபெற்ற விஜய்- அஜித் ரசிகர்களின் மோதல் கவலை அளித்துள்ளன.

புதுப்படங்களின் வெளியீடு இல்லாமல் பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் நிறைவடையாது என்பது போல் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பண்டிகைகளின் கொண்டாட்டங்களில் புதுப்படங்களின் வெளியீடும் ஒரு அங்கமாகிப்போனது. குறிப்பாக பொங்கல் பண்டிகையின்போது வரும் தொடர் விடுமுறைகளை குறிவைத்து அதிக படங்கள் வெளியிடப்படுவது வழக்கம்.  ஒரு காலத்தில் பொங்கல் அன்று ஒரே நேரத்தில் 10 படங்களுக்கும் மேல் வெளியாகிய சூழல் மாறி தற்போது உச்ச நட்சத்திரங்களின் ஓரிரு படங்கள்தான் வெளியாகி மொத்த வசூலையும் அள்ளிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்- அஜித் என உச்ச நட்சத்திரங்களின் திரையுலக வாழ்க்கையில் வசூல் சாதனைகளாக அமைந்த பல படங்கள் பொங்கல் வெளியீடுகளாகத்தான் வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆரின் எங்கள் வீட்டுப்பிள்ளை, சிவாஜியின் கர்ணன், ரஜினியின் பாட்ஷா, கமலின் ஒரு கைதியின் டைரி, விஜயின் போக்கிரி, அஜித்தின் வீரம் என பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெகா ஹிட் அடித்த உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த வகையில் தற்போது புதிய வசூல் சாதனைகளை படைக்கும் முனைப்போடு விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு களத்தில் குதித்திருக்கின்றன.  இருபடங்களின் வெளியீட்டையும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர்.

தங்கள் அபிமான நட்சத்திரங்களின் படங்களை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக ஒருவருக்கொருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்வதோடு கொண்டாட்டங்கள் நிறைவடைந்தது தியாகராஜபாகவதர்- பி.யூ.சின்னப்பா காலத்தில். பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் அவர்களின் கட்அவுட்டிற்கு மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து ஆரத்தி எடுத்து தங்கள் அபிமானத்தை வெளிப்படுத்தினர் அவர்களது தீவிர ரசிகர்கள். ரஜினி, கமல் காலத்தில் கட்அவுட்டிற்கு பாலாபிஷேகம் நடைபெறும் அளவிற்கு கொண்டாட்டங்கள் அதிகரித்தன. ரஜினி படங்கள் வெளியாகும்போது அவரது ரசிகர்கள் திரையரங்கின் முன்பு கிடா வெட்டி விருந்து படைத்த சம்பவங்களும் அரங்கேறியிருக்கின்றன. தற்போது விஜய், அஜித் ரசிகர்கள் தங்களின் அபிமான நட்சத்திரங்களின் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டிலிருந்தே கொண்டாட்டங்களை தொடங்கிவிடுகின்றனர்.

அஜித்தின் துணிவு படத்தின் டிரெய்லர் வெளியாகும்போது, விஜயின் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகும்போதும் சென்னையில் சினிமா ரசிகர்களின் கோட்டை என வர்ணிக்கப்படும் ரோகிணி திரையரங்குகளில் அரசியல் கட்சிகளின் கூட்டம்போல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பரித்தனர். ரஜினி படம் வெற்றி பெற வேண்டி அவரது ரசிகர்கள் முன்பு காவடி எடுத்தனர். தற்போது துணிவு, வாரிசு படங்கள் வெற்றிபெற வேண்டி அவரது ரசிகர்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு விரதமிருந்து மாலை அணிந்து சென்றனர். அவர்கள் சபரிமலையில் துணிவு, வாரிசு படங்களின் பேனர்களை காண்பித்த வீடியோ இணையத்தில் வைரலானது. இப்படி பட வெளியீட்டுக்கு முன்பே கொண்டாட்டங்களும், எதிர்பார்ப்புகளும் களைகட்டியது என்றால்,  வாரிசு, துணிவு படங்களின் வெளியீட்டு நாளன்று கொண்டாட்டங்கள் உச்சக்கட்டங்களை தொட்டன.  தமிழ்நாட்டில் புதுப்படங்களை ரிலீஸ் செய்யும் சுமார் 1200 திரையரங்குகளில் கிட்டதட்ட சரிபாதியான திரைகள் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.  முன்பதிவு தொடங்கிய சிறிதுநேரத்திலேயே டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்த நிலையில்,  டிக்கெட்டுக்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இதற்காக சாலைமறியலே நடந்து, அதில் பங்கேற்ற விஜய், அஜித் ரசிகர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் பெரும் எதிர்பார்க்கிற்கிடையே 9 வருடங்களுக்கு பின்னர்  ஒரே நாளில் விஜய், அஜித் படங்கள் வெளியாகின. அதிகாலை 1 மணிக்கு பல்வேறு இடங்களில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன. வாரிசு மற்றும் துணிவு படங்கள் வெளியான திரையரங்க வளாகங்களால் கட்அவுட்டுகளாலும், பேனர்களாலும், தோரணங்களாலும் களை கட்டியிருந்தன. கட்அவுட்டுக்கு, பேனர்களுக்கும் பாலாபிஷேகம் செய்தும், தங்கள் அபிமான நட்சத்திரங்களான விஜய், அஜித் மீது தாங்கள் வைத்திருக்கும் அன்பை அவர்களது ரசிகர்கள் வெளிப்படுத்தினர். சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில் டிஜே கச்சேரி வைத்தும் கொண்டாடிய ரசிகர்கள், தங்கள் ஆர்ப்பரிப்புகளாலும், ஆரவாரங்களாலும் திரையரங்குகளை தெறிக்கவிட்டனர்.

ஆனால் இந்த கொண்டாட்டங்கள் கொண்டாட்டங்களாக மட்டும் இல்லாமல், பல்வேறு இடங்களில் ரகளையாகவும், ரணகளமாகவும், கலவரமாகவும் மாறியதுதான் பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களையும் எரிச்சலிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் சினிமாவில் வருவதுபோல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் உள்ளே புகுந்த காட்சி இணையத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு வாரிசு பட பேனர்களை அஜித் ரசிகர்களும், துணிவு பட பேனர்களை விஜய் ரசிகர்களும் மாறி மாறி கிழித்தனர். ரசிகர்களின் கலாட்டாக்களை தடுக்க போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து கோயம்பேடு – மதுரவாயல் சாலையில் சென்ற கனரக வாகனங்களை நிறுத்தி அதன் மீது ஏறி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.   கோவை உள்ளிட்ட இடங்களிலும் திரையரங்குகளில் கண்ணாடி உடைப்பு, பேனர் கிழிப்பு போன்ற அசம்பாவிதங்கள் அரங்கேறின.

 

எல்லாவற்றத்திற்கும் உச்சக்கட்டமாக சோகம் ஒன்று சென்னை கோயம்பேட்டில் அரங்கேறியது. துணிவு கொண்டாட்டத்தின்போது, லாரி மீது ஏறிய நடனமாடிய இளைஞர் கீழே விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை, ரிச்சி தெருவை சேர்ந்த 19 வயது இளைஞர் பரத்குமார், அஜித் நடித்த துணிவு திரைப்படத்தை பார்க்க கோயம்பேடு ரோகிணி திரையங்கிற்கு வந்துள்ளார். அப்போது, சாலையில் மெதுவாக சென்ற ட்ரெய்லர் லாரி மீது ஏறி நடனமாடியுள்ளார். பின்னர் லாரியில் இருந்து குதித்தபோது, பரத்குமாருக்கு முதுகுத்தண்டில் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தனக்கு பிடித்த ஹீரோவை கொண்டாடுவதில் அந்த இளைஞர் காட்டிய கண்மூடித்தனமாக போட்டியும், ஆர்வமும் அவரது உயிரை பறித்ததோடு மட்டுமல்லாமல், அந்த இளைஞரின் குடும்பத்தையும் சோகத்தில் மூழ்கடிக்கச் செய்துள்ளது.

 

இதுகுறித்து கண்ணீர்மல்க தங்கள் கருத்துக்களை தெரிவித்த பரத்குமாரின் பெற்றோர்கள், இளைஞர்கள் தங்களது பெற்றோர்களையே ஹீரோக்களாக பாவிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றனர். உச்ச நட்சத்திரங்கள் தங்களது ரசிகர்கள் இது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்றும் உருக்கமாக பரத்குமாரின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர். பரத்குமாரின் குடும்பத்திற்கு நடிகர் அஜித்குமார் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும் என சினிமா சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் வலியுறுத்தியுள்ளார்.

வாரிசு, துணிவு படங்களின் மோதலில் தங்கள் கெத்தை காட்டுவதற்காக தடையை மீறி பேனர் வைத்தது, ரகளையில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி வாழ்க்கையின் வாழ்வாதாரத்தை தேடி பயணிக்க வேண்டிய நேரத்தில் வழக்குகளில் சிக்கித்தவிக்கும் இளைஞர்களும் உண்டு.

ஹீரோக்களின் துணிவை நிரூபிப்பதற்காக பெற்றோர்களுடைய வாரிசுகள் பலியாவதும், அவர்கள் வாழ்க்கை முடங்கிப்போவதும் இனியும் தொடரவேண்டாம்.

-எஸ்.இலட்சுமணன்  

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ரூ.1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் திட்டம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

EZHILARASAN D

பட்ஜெட் 2023: இந்தியாவின் வளர்ச்சிக்கு AI சிறப்பு மையங்களை உருவாக்க திட்டம்

Yuthi

பரந்தூர் விமான நிலைய முழு பொறுப்பும் மாநில அரசிடம் உள்ளது- மத்திய அரசு

G SaravanaKumar