முறப்பநாட்டில் விஏஓ கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் என்பவர், வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். தனது அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த 2 நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஏஓ அதிகாரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆற்றில் மணல் அள்ளியது தொடர்பாக புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணியம், மாரி என்ற இருவர் படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. ராமசுப்பரமணியத்தை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : புனித யாத்திரையை முன்னிட்டு கேதார்நாத் கோயில் நடை திறப்பு!!
இதனிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “லூர்து பிரான்சிஸ் மிக நேர்மையான அதிகாரி. ஆதிச்சநல்லூரில் பணியாற்றிய போது
அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து மீட்டு மிகவும் தைரியமாக செயல்பட்டவர். அரசாங்க சொத்துகளுக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்று நினைப்பவர். இவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விஏஓ சங்க மாநில பொதுச்செயலாளர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், லூர்து பிரான்சிஸ் அரிவாளால் வெட்டப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும், அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் குடும்பத்தினருக்கு தகுந்த நிவாரணம் தர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.








