இசை வானில் சிறகடித்துப் பறந்த வாணி ஜெயராம்!

தமது காந்த குரலினால் மக்களின் மனதை கட்டிப்போட்ட பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். அவரது மரணம் இசை ரசிகர்களை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. இசைவானில் சிறகடித்துப் பறந்த வாணி ஜெயராமின் வாழ்க்கை…

தமது காந்த குரலினால் மக்களின் மனதை கட்டிப்போட்ட பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். அவரது மரணம் இசை ரசிகர்களை மீளா துயரில் ஆழ்த்தியுள்ளது. இசைவானில் சிறகடித்துப் பறந்த வாணி ஜெயராமின் வாழ்க்கை பயணத்தை தற்போது பார்க்கலாம்.

வேலூரில் இசைப் பரிச்சயமும், பக்தியும் மிக்க தமிழ் குடும்பத்தில் 1945ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிறந்தவர் ‘கலைவாணி’ என்ற வாணி ஜெயராம். கடலூர் ஸ்ரீனிவாச அய்யங்கார், டி.ஆர்.பாலசுப்ரமணியம், ஆர்.எஸ்.மணி ஆகியோரிடம் கர்நாடக இசையை பயின்று வந்த வாணிக்கு, சிலோன் வானொலியில் ஒலிபரப்பான லதா மங்கேஷ்கர், முகம்மது ரபி, மன்னாடே ஆகியோரது பாடல்களைக் கேட்கக் கேட்கத் தாமும் திரைப்படங்களில் பாடவேண்டும் என்ற ஆசை சிறுவயதிலேயே துளிர்விட்டது.

அதன் பின்னர் சென்னை ராணி மேரிக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த வாணி ஜெயராமுக்கு, பாரத ஸ்டேட் வங்கியில் வேலை கிடைத்தது. திருமணத்துக்குப் பிறகு பணி மாறுதல் காரணமாக மும்பையில் வசித்து வந்த வாணிக்கு, மீண்டும் இசை ஆர்வத்தை ஊக்குவித்தவர் அவரின் கணவர் ஜெயராம்தான். இதனைத் தொடர்ந்து உஸ்தாத் அஹ்மத் கானிடம் முறையாக ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டார். வாணி ஜெயராமுக்கு வானளாவிய தன்னம்பிக்கையை இசை தந்தது. வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழுமூச்சாக இசையில் இறங்கினார்.

கர்நாடகம், ஹிந்துஸ்தானியில் நிபுணத்துவம் பெற்ற வாணி ஜெயராம், 1971ம் ஆண்டு வெளியான ‘குட்டி’ (GUDDI) என்ற இந்தி படத்தில் வசந்த் தேசாயின் இசையில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். வாணி ஜெயராமின் குரல் அறிமுகமும், அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயா பச்சனின் குடும்பப் பாங்கான தோற்றமும் இணைந்து பெரும் மாயத்தை செய்ய ரசிகர்கள் கிறங்கிப் போனார்கள்.

அறிமுகப் பாடலே அபார வரவேற்பைப் பெற வாணி ஜெயராமை முன்னணிப் பாடகியரின் வரிசையில் இடம்பெறச் செய்தது. அதன்பின் ஒரு தமிழ்க் குரல் இந்தியில் கொண்டாடப்படும்போது தமிழில் மட்டும் தவறவிடுவார்களா என்ன? 1974ம் ஆண்டு தீர்க்க சுமங்கலி படத்தில் இடம்பெற்ற ’மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல் பாடி தமிழ்நாட்டில் உள்ள பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் வாணி ஜெயராம்.

இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம். அது மட்டுமல்லாது பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின் உயரிய விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர் வாணி ஜெயராம் என்றால் அது மிகையல்ல.

குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முள்ளும் மலரும் படத்தில் இடம்பெற்ற ’நித்தம் நித்தம் நெல்லு சோறு’ தமிழ் இசை வரலாற்றில் ஒரு கிளாசிக் எனலாம். இப்பாடல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை அப்படியே ஒரு கிராமத்து பெண் பாடுவது போலவே பாடி முடித்திருப்பார் வாணி ஜெயராம். இந்தப் பாடலை கேட்டு முடித்த பிறகும் அதிலிருந்து மீண்டு வர சில நேரம் ஆகும். அப்படியான குரலுக்கு சொந்தக்காரர் வாணி ஜெயராம்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’, ‘சங்கராபரணம்’ படத்தில் இடம்பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’, ‘ஸ்ருதிலயாலு எனும் தெலுங்குப் படத்தில் இடம்பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறார் வாணி ஜெயராம். சமீபத்தில்கூட மத்திய அரசு, பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம், எழுதி முடிக்க முடியாத சாதனைகளை உள்ளடக்கியது. ஏனெனில் அவர் பாடாத இந்திய மொழியே இல்லை எனும் அளவுக்குச் சாதனைகள் படைத்திருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.