நேற்று (நவம்பர் 14) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 15) அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து, காலை 8.30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அதே நிலையில் நீடித்து வருகிறது.
17-ஆம் தேதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு!
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக, நாளை (நவம்பர் 16) தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து, நவம்பர் 17-ஆம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திர மாநிலக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நிலவும் வளிமண்டலச் சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை!
சுமார் 1.5 கிலோமீட்டர் உயரம் வரை தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. மேலும், சுமார் 3.1 கிலோமீட்டர் உயரம் வரை கேரளக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளிமண்டலச் சுழற்சி நிலவுகிறது.
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இதன் காரணமாக இன்று (நவம்பர் 15) இரவு 7 மணி வரை தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




