சிவகாசியில் போதை மாத்திரை பயன்படுத்துவதை கண்டித்த வேன் ஓட்டுநரை வெட்டிக் கொலை செய்த கல்லூரி மாணவர்கள் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகாசி பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநரான ஆனந்தராஜை, பட்டப்பகலில் ஒரு கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. பலத்த வெட்டுக்காயமடைந்த ஆனந்தராஜை, பொதுமக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த மேலும் 3 மாணவர்களை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், கல்லூரி மாணவர்கள், சில மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வந்ததும், இதனை பார்த்த ஆனந்தராஜ், அவர்களை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், ஆனந்தராஜை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







