“மருந்தியல் கல்வி, ஆய்வுக்கழத்தை அமைக்கும் பணியை துரிதப்படுத்துக“ – எம்.பி வலியுறுத்தல்

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கழகத்தை ( NIPER ) மதுரையில் துவக்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தக் கோரி இரசாயனத்துறை செயலாளரை நேரில் வலியுறுத்தியுள்ளார் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் இது குறித்து அவர்…

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக்கழகத்தை ( NIPER ) மதுரையில் துவக்குவதற்கான பணிகளை விரைவுபடுத்தக் கோரி இரசாயனத்துறை செயலாளரை நேரில் வலியுறுத்தியுள்ளார் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன்

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆய்வுக் கழகத்தை (NIPER) மதுரையில் அமைப்பது தொடர்பான கடிதங்களை வழங்கி, திட்டத்தைத் தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும், விரைந்து தொடங்க வேண்டிய தேவை குறித்தும் உரம் மற்றும் ரசாயனத்துறைச் செயலாளர் அபர்ணாவையும், நிதித்துறைச் செயலாளர் (செலவினம்) டி.வி.சோமநாதனையும் சந்தித்துப் பேசினேன்.

தேசிய மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகத்திற்காக மதுரையில் 2012ஆம் ஆண்டு தரப்பட்ட நூறு ஏக்கர் நிலமானது முன் நுழைவு அனுமதிக்கான சான்று மட்டுமே தரப்பட்டுள்ளது. அதன் பிறகு அந்நிலமானது கழகத்தின் பெயரில் பெயர் மாற்றம் செய்யப்படாமலே இருக்கிறது. அதற்கான விண்ணப்பமும் மருந்தியல் கழகம் சார்பில் தரப்படவில்லை.

இது தேவையற்ற பிரச்சினையைப் பிற்காலத்தில் உருவாக்கும். குறிப்பாக மதுரை எய்ம்ஸ் போல, நிலத்துக்கான பெயர் மாற்றம் மற்றும் ஒப்படைத்தல் என்பதே பெரும் கால விரயத்தை உருவாக்கும் நிலையும் ஏற்படலாம். சில நேரம் பிற வேலைகளுக்காக நிலம் பயன்படுத்தப்பட்டுவிடும் ஆபத்தும் உண்டு.

https://twitter.com/SuVe4Madurai/status/1451819243888992260

எனவே நிலத்தை தேசிய மருந்தியல் கல்விக் கழகத்தின் பெயரில் மாற்றித்தர உரிய விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு துறைச் செயலாளரிடம் வலியுறுத்தினேன். மதுரை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியிடமிருந்து பெற்று வந்த அதற்குரிய விண்ணப்பத்தையும் மத்திய அரசின் செயலாளர் வசம் ஒப்படைத்தேன். விரைவில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று நம்புகிறேன்” என வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.