சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தீரமிக்க இளைஞர்கள்

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தீரமிக்க இளைஞர்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். “எந்த ஒரு போராட்டத்துக்கான முடிவும் இளைஞர்கள் கையில்’’ என்பதுதான், எழுதப்படாத விதிகளுள் ஒன்று. இன்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களில் இளைஞர்களின்…

சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தீரமிக்க இளைஞர்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

“எந்த ஒரு போராட்டத்துக்கான முடிவும் இளைஞர்கள் கையில்’’ என்பதுதான், எழுதப்படாத விதிகளுள் ஒன்று. இன்றும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த போராட்டங்களில் இளைஞர்களின் பங்கு, பெருமளவில் இருக்கிறது. ஆனால், 75 ஆண்டுகளுக்கு முன்பே, நாட்டின் சுதந்திரத்திற்காக எழுச்சியோடு எழுந்து நின்றனர் இளைஞர்கள். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை எட்டியுள்ள நாம், நெஞ்சத்தில் நினைவுகொள்ள வேண்டியது இவர்களைத்தான்… இவர்களில் முதலாவதாக நாம் பார்க்க இருப்பவர் தான் பிர்சா முண்டா.

விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் தான் பிர்சா முண்டா. ஜார்கண்ட் மாநிலம் சோட்டா நாக்பூர் பகுதியில் 1875ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி பிறந்தார். 25 வயது வரை மட்டுமே உயிர் வாழ்ந்த பிர்சா முண்டா, ஜார்கண்ட் மாநில பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடினார். ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்று ஆங்கிலேய அரசிடமும், உள்நாட்டு நிலவுடமைத் தாரர்களிடமும் அடிமைப்பட்டிருந்த பழங்குடி மக்களுக்காகப் போராடிய முதல் வீரர் என்பதால், அப்பகுதி மக்கள் இவரை மண்ணின் மைந்தன் (((தர்த்தி அபா) )) என்றே இன்று வரை அழைத்து மகிழ்கின்றனர்.

இதேபோன்று, இந்திய விடுதலை போராட்டத்தில் ஒட்டுமொத்த தேசத்தையும் திரும்பி பார்க்க வைத்த வீரர் தான் பகத் சிங். 1907ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி அப்போதைய பஞ்சாப் மாநிலம் பங்கா எனும் பகுதியில் பிறந்த பகத்சிங்குக்கு, சிறுவயது முதலே விடுதலை போராட்டத்தின் மீது அதிக ஆர்வம் இருந்தது. 1919ல் நாட்டையே உலுக்கிய ஜாலியன்வாலா பாக் படுகொலை, பகத்சிங்கையும் புரட்டிப்போட்டது. இந்த நிலையில் தான், லாலா லஜபதி ராய் மரணத்துக்கு காரணமான காவலர் ஸ்காட்டை கொல்ல முடிவெடுத்தார் பகத்சிங். ஆனால், தவறான சமிக்ஜையால் வேறு ஒரு காவல் அதிகாரியை சுட்டுக்கொன்றனர் பகத்சிங்கும் அவரது நண்பர்களும். இந்திய விடுதலைப் போரில், இளைஞர்களின் புரட்சி நாயகன் என்றழைக்கப்படும் பகத் சிங், நாட்டுக்காக தன்னுடைய 23 வயதில், தன் நண்பர்கள் ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலடப்பட்டார்.

இளம் வயதிலேயே இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர் என்றார், வங்காளப் புரட்சியாளர் குதிராம் போஸ். 1889 டிசம்பர் 3ம் தேதி பிறந்த குதிராம் போஸ், 1905ல் ஆங்கிலேயர் ஆட்சியில் வங்கப் பிரிவினைக்கு எதிராக நாடே கொந்தளித்த போது, தானும் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது, பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. இந்த போராட்டம் பெரியளவில் வெடித்தது. 1908ல் குதிராம் கைது செய்யப்பட்டு, ஆங்கிலேய அரசின் சட்டப்படி குதிராமுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. முசாபர்பூர் சிறையில் வந்தே மாதரம் என ஒலித்தபடி மரணத்தை ஏற்றார் குதிராம் போஸ்.

தமிழகத்திலும் சுதந்திர போராட்டத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்தவர் திருப்பூர் குமரன். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1904ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி பிறந்தார் திருப்பூர் குமரன் பிறந்தார். காந்திய கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் பங்கேற்றார். 1932 ஜனவரி மாதம் ஆங்கிலேய அரசை கண்டித்து நடந்த போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டது. தன் உயிர் போனாலும் கவலை இல்லை என்று, தேசிய கொடியை உயர்த்தி பிடித்தவாறே மண்ணில் வீழ்ந்தார் குமரன். தேசிய கொடிக்கு அவமரியாதை ஏற்படக் கூடாது என்ற குமரின் செயல் இன்றுவரை போற்றப்படுகிறது.

 

கட்டுரையாளர்: தமிழ்முல்லை

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.