75 ஆண்டுகளில் பொருளாதார அளவில் இந்தியா அடைந்த வளர்ச்சி

75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், 1947ஆம் ஆண்டுக்கு பிறகு பொருளாதார அளவில் இந்தியா அடைந்த வளர்ச்சி குறித்து இந்த கட்டுரையில் காணலாம். சுதந்திர இந்தியாவுக்காக எண்ணற்ற வீரர்கள் செய்த தியாகத்தால், இன்று 75-வது…

75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், 1947ஆம் ஆண்டுக்கு பிறகு பொருளாதார அளவில் இந்தியா அடைந்த வளர்ச்சி குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.

சுதந்திர இந்தியாவுக்காக எண்ணற்ற வீரர்கள் செய்த தியாகத்தால், இன்று 75-வது ஆண்டு சுதந்திர தின பவள விழாவை பெருமையுடன் கொண்டாடி வருகிறோம். நாடு இதுவரை அடைந்த வளர்ச்சியை பறைசாற்றும் விதமாக, ஒவ்வொரு சுதந்திர தின அணிவகுப்பும் அமைகின்றது.

நாட்டின் 75 ஆண்டுகால பொருளாதார வளர்ச்சியால், இன்று உலகளவில் வாங்கும் சக்தி கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் 1947-ம் ஆண்டு சுதந்திரம் பெற்றபோது, நாட்டின் பொருளாதாரம் ஒரு திருப்புமுனையை சந்திக்க காத்துக்கொண்டிருந்தது.

நாட்டை ஆட்சி செய்த பிரிட்டிஷாரின், முழுமைபொறாத தொழில்மயமாக்கலும், இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தாலும் கடுமையான, பொருளாதார நிதி நெருக்கடியில் இருந்தது நாடு. அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய, ஜவஹர்லால் நேரு உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில், இந்தியா விடுதலை விழியை திறந்திருக்கிறது. நமக்கான வாய்ப்புகள் திறந்திருக்கின்றன. நமக்கான வெற்றிகள் காத்திருக்கின்றன. அதற்கு நாம் தயாராகவேண்டும் என்றார்.

 

 

ஒரு தீர்க்கதரிசியை போல், 75 ஆண்டுகளுக்கு முன்னர் நேரு சொன்ன விஷயங்கள், இன்றைக்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் காரணமாகதான் அவர் நவீன இந்தியாவின் சிற்பி என்றழைக்கப்படுகிறார்.

1948-ம் ஆண்டு நேரு அறிமுகப்படுத்திய கலப்பு பொருளாதார பாதையில்தான், இன்றளவும் இந்தியா நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த,1950-இல் திட்ட கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவின் முதல் ஐந்தாண்டு திட்டம்,1951-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் விவசாயம், நீர்ப்பாசனம், உணவு பாதுகாப்பு, மின்சக்தி, எஃகு இரும்பு உருக்கு லைகளை அதிகரிப்பது ஆகியவை முக்கிய விஷயங்களாக எடுத்துக்கொள்ளப்பட்டன.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, மின்சக்தியும், எஃகு இரும்பு உருக்கு ஆலையும் முக்கிய பங்கினை வகிக்கும் என்று உணர்ந்திருந்தார் பிரதமர் நேரு. இதனை கருத்தில்கொண்டே உலகின் மிக உயரமான பக்ரா நங்கல் அணை திட்டத்தை செயல்படுத்தினார். இந்த அணையின் மூலம் ஆயிரத்து 200 மெகாவாட் நீர் மின்சக்தி பெறப்படுகிறது. மேலும், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், ஆகிய நான்கு மாநிலங்களில் 15 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள், நீர்பாசன வசதி பெற்றுவருகின்றன.

முதல் ஐந்தாண்டு திட்டத்தின் மூலம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஆண்டுக்கு 2 புள்ளி ஒரு சதவிதத்தில் இருந்து, 3 புள்ளி 6 சதவிதமாக வளர்ச்சி அடைந்தது. அதனைத் தொடர்ந்து 1956-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட, இரண்டாவது ஐந்தாண்டு திட்டம், பொருளாதார நவீனமயமாக்கலுக்கு அடித்தளமிட்டது.

நாட்டின் கனரகத் தொழில்கள் மற்றும் மூலதனப் பொருட்களை மையமாகக் கொண்டு, விரைவான தொழில்மயமாக்கல் பாதையில், நாட்டின் பொருளாதாரம் பயணிக்கத் தொடங்கியது.

இந்த காலகட்டத்தில்தான், பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, சுரங்கத் தொழில், எண்ணெய் கிணறுகள், விவசாயம், உருக்கலைகள் உள்ளிட்ட அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்கள், பொது துறையின் கீழ் கொண்டுவரப்பட்டது. நுகர்வோர் சார்ந்த தொழில்கள் மட்டும் லைசென்ஸ் ராஜ் கட்டுப்பாட்டின் கீழ், தனியார் வசம் வழங்கப்பட்டது.

இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின்போதுதான், நாட்டில் 60 லட்சம் டன் இரும்பு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அப்போதுதான் ஜெர்மன் நாட்டு உதவியுடன், ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில், நாட்டின் முதல் அரசு இரும்பு எஃகு உருக்கு ஆலை நிறுவப்பட்டது. ரூர்கேலாவில் உருக்கு ஆலை, தற்போதுவரை நாட்டின் இரும்பு உற்பத்தியில் முக்கிய பங்காற்றி வருகிறது.

பின்னர் 1962-ம் ஆண்டு நடந்த இந்திய சீனா போர் மற்றும் பாகிஸ்தானுடனான போர்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது ((அப்போது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி)) நாட்டின் பொருளாதார பலவீனத்தை உணர்ந்து, அதற்கேற்றார் போல் வளர்ச்சி திட்டங்களை வகுக்கத் தொடங்கினார். தனியார் தொழில்முனைவோர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை, வளர்ச்சி துறைகளில் ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அவருடைய ஆட்சி காலகட்டத்தில்தான், நாட்டில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டது. இதனை சரிசெய்ய வேளாண் விஞ்ஞானிகள் எம்.எஸ்.சுவாமிநாதன், நார்மன் போர்லாக் தலைமையில் பசுமை புரட்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பல்வேறு வீரிய விதைகள் பயன்படுத்தப்பட்டு, உணவு பஞ்சம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நாட்டில் பசுமை புரட்சி நடந்தபோதுதான், தென்மாநில உணவு வகைகளில் கோதுமையும், வட மாநிலங்களில் அரிசிப் பயன்பாடும் பிரபலமாயின.

பசுமை புரட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, வெண்மை புரட்சியில் இந்திய அரசு கவனம் செலுத்த தொடங்கியது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க, நாடு முழுவதும் ஒரு கோடியே 20 லட்சம் பால் கூட்டுறவு சங்கங்கள் தொடங்கப்பட்டது. குஜராத் மாநிலத்தை மையப்படுத்தி தொடங்கப்பட்ட வெண்மை புரட்சியின் வெற்றிதான், அம்மாநிலத்தில் சிறியதாக செயல்பட்டுவந்த AMUL கூட்டுறவு சங்கம், கடந்த நிதியாண்டில் மட்டும் 52 ஆயிரம் கோடிக்கு பொருட்களை விற்பனைச் செய்து அசுர வளர்ச்சியை அடைய உதவி இருக்கிறது. விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கிட இந்திரா காந்தியின் பெரு முயற்சியால் 1969 இல் 14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.

தற்போது நாட்டில் 12 பொதுத் துறை வங்கிகளும், 21 தனியார் வங்கிகளும் உள்ளது. அதேபோல் சீனா, பாகிஸ்தானுடன் நடந்த இரண்டு போர்கள் காரணமாக, நாட்டின் பாதுகாப்பு துறையை வலுப்படுத்தும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனுடைய முக்கிய நடவடிக்கையாக 1974-ம் ஆண்டு, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில், இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனை நடைபெற்றது. இந்திரா காந்தி தலைமையில் நடந்த இச்சோதனை, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதனைத் தொடர்ந்து யுரேனியம் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா, தாராப்பூர் அணுசக்தித் திட்டம், கல்பாக்கம் இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம், பாபா அணுசக்தி அணு ஆராய்ச்சி மையம், உள்ளிட்ட அணு ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்பட்டது. இதனுடைய வெளிப்பாடாகதான் ஒவ்வொரு சுதந்திர தின அணிவகுப்பின்போதும், பாதுகாப்பு துறை வளர்ச்சியை பிரதிபலிக்கும் அக்னி, பிருத்வி, கே15 சகரிகா, நாக், ஆகாஷ், மஸ்கிட், பிரம்மோஸ் உள்ளிட்ட ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்படுகிறது.

1980-இல் நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைகள் விரிவுப்படுத்தப்பட்டன. அதேபோல் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, புதிய பொருளாதார கொள்கை உருவாக்கப்பட்டு, அந்நிய நேரடி முதலீடுகள் கொண்டுவரப்பட்டது. இதன்காரணமாக இந்தியாவில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு, நிறுவனங்களின் தன்னம்பிக்கை அதிகரித்தது. இந்தியா இன்று எளிதாகத் தொழில் செய்யக்கூடிய தரவரிசையில் பெரும் முன்னேற்றங்களை எட்டியுள்ளது.

ஒரு காலத்தில் விவசாயம் மட்டுமே வாழ்வாதாரமாக, பார்க்கப்பட்ட நிலையில், சமீப காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் விவசாய பொருட்களை உலக சந்தைகளுடன் இணைக்கும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு உற்பத்தி பொருட்களை அதிகரிக்க, பிரதமர் மோடி Make in india திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதனுடைய வெளிப்பாடாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, முதல் விமானம் தாங்கி போர் கப்பலான விக்ராந்த் தனது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக தொடங்கியது.

அதேபோல் 1951-ம் ஆண்டு 16 சதவிதமாக இருந்த, கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை தற்போது 77 சதவிதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் 73 சதவிதமாகவும் நகர்ப்புறங்களில் 87 சதவிதமாகவும் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆண்டுதோறும் விமானச் சேவையும் 20 விழுக்காடு வளர்ச்சி கண்டு வருகிறது.

நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு தலைமையிலான அரசுகள் மேற்கொண்ட முயற்சியால், 1991-ம் ஆண்டுக்கு முன்பு வரை 4 புள்ளி 7 சதவிதமாக இருந்த நாட்டின் உள்நாட்டு உற்பத்தி, அதன்பிறகு 7.5 சதவீதமாக உயர்ந்தது.

இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட காரணங்களால், 2020- 2021 முதல் காலாண்டில், கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி குறைந்ததாக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.

இது தொடர்பாக பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும், 2020- 2021-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள ஒதுக்கீடுகள் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றும் கூறினார்.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ‘திங்க் டேக்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி 2.94 டிரில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்து இருந்தாலும், பொருளாதார வளர்ச்சியில் மேம்பாடு அடைந்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருந்தபோதும், சமீப காலங்களாக வேலைவாய்ப்பின்மை, நிதிப் பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. இதுஒருபுறம் இருந்தாலும், நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முன்னோக்கி செல்வதில் இருந்து, இந்தியா பின்வாங்கவில்லை என்பதைதான், கடந்த கால வரலாறுகள் சுட்டிக்காட்டுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.