இதுவரை நாடு கண்ட பிரதமர்கள்

முன்னோர்களின் ஈடு இணையற்ற தியாகங்களின் விளைவாக 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. சுதந்திர இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்சென்றதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உள்ளதென்றாலும், இந்திய பிரதமர்கள் ஒவ்வொருவரின் பங்கும் மகத்தானது. அப்படி சுதந்திர…

முன்னோர்களின் ஈடு இணையற்ற தியாகங்களின் விளைவாக 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றது. சுதந்திர இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச்சென்றதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உள்ளதென்றாலும், இந்திய பிரதமர்கள் ஒவ்வொருவரின் பங்கும் மகத்தானது. அப்படி சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நாட்டை வழிநடத்தியவர் தான் ஜவஹர்லால் நேரு.

1947 முதல் 1964 வரை இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்று சுமார் 17 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார். ’நவீன இந்தியாவின் சிற்பி’ என வரலாற்றில் பதிவு செய்யப்பட்டார் நேரு. பிரிட்டிஷார் விட்டு சென்ற இந்தியாவானது, உலகத்தின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாக தர வரிசைப் படுத்தப்பட்டிருந்தது. இத்தகைய மோசமான பொருளாதார பின்னணியில் தான் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்ற நேரு, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல கடுமையான முயற்சிகளை மேற்க்கொண்டார். இந்தியா குறித்த அவரின் கனவு, அரசியலமைப்புச் சட்டத்திலும் பிரதிபளித்தது.

விவசாயத்திற்கு மத்திய பொருள் கிடங்குக் கழகம், இந்திய உணவுக் கழகம், நீர்பாசனத்திற்கு தாமோதர் பள்ளத்தாக்குக் கழகம், ஐந்தாண்டுத் திட்டங்கள், அணைகள், பொதுத்துறை நிறுவனங்கள், பெருந்தொழிற்சாலைகள், பொருளாதார திட்டங்கள், விவசாயம், நீர்ப்பாசனம், மின்சாரம், விண்வெளி ஆராய்ச்சி, ஐஐடி என நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு விஷயங்களை உருவாக்கினார் நேரு. அவர் உருவாக்கிய Planning commission இந்தியா முழுவதும் பரந்து விரிந்து ஏழை எளிய மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தது. இந்திய தேசத்தை தொலைநோக்கு பார்வையோடு வளர்ச்சிக்கு வழி காட்டினார் நேரு. கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, குடும்பக் கட்டுப்பாடு, பொருளாதாரம் என எந்த துறையை எடுத்தாலும், இந்தியா இன்று அறுவடை செய்வதெல்லாம் நேரு போட்ட விதைகளைத் தான். மதவாதமும், வகுப்புவாதமும் ஆபத்தானவை. அப்படி மதவாதம் மற்றும் வகுப்புவாதம் மூலம் பெறும் ஒரு ஓட்டு கூட எனக்கு வேண்டாம். அவற்றைத் தொடர்ந்து எதிர்ப்பேன்” என முழங்கிய, சுதந்திர இந்தியாவின் ஜனநாயக வளர்ச்சிக்கு வித்திட்ட நேரு, 1964ம் ஆண்டு, மே 27ம் தேதி காலமானார்.

நேருவின் மறைவிற்கு பிறகு, பிரதமராக பதவியேற்றார் குல்சாரி லால் நந்தா. 1964ஆம் ஆண்டு நேரு இறந்தபொழுது முதல் முறையும், 1966ஆம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுதும் இரண்டாவது முறை இடைக்கால பிரதமராக பதவி வகித்தார். நேருவின் இறப்பிற்கு பிறகு மூத்த அமைச்சர் என்ற அடிப்படையில் இடைக்கால பிரதமாரக இருந்தார் குல்சாரிலால் நந்தா. 13 நாட்கள் மட்டும் பதவியில் நீடித்தப் பின், பல்வேறு கட்ட ஆலோசனைகள், தீவிரமான பரிசீலனைகளின் அடிப்படையில் லால் பகதூர் சாஸ்திரியை புதிய பிரதமராக காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தேர்வு செய்தது. வெறும் 13 நாட்களே பிரதமராக இருந்ததால் இவரது காலத்தில் புதிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

இவரைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்றார் லால் பகதூர் சாஸ்திரி. 1904 அக்டோபர் 2-ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முகலசரை எனும் இடத்தில் பிறந்த சாஸ்திரி, ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, பின்னர் அரசியலில் சேர்ந்தார். 1951ஆம் ஆண்டு மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றவர், ரயில்வே அமைச்சராக இருந்த போது அரியலூரில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சாஸ்திரி பிரதமராக பதவியெற்றப்பிறகு தான் 1965- பாகிஸ்தான், இந்தியா மீது போர் தொடுத்தது. இந்தப் போர் செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி, போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் நிறைவுற்றது. ரஷ்ய பிரதமர் இரு நாடுகளிடம் சமரசம் செய்ய ஒப்புக்கொண்டார். இதற்காக லால் பகதூர் சாஸ்திரி 1966ஆம் ஆண்டு தாஷ்கன்ட் சென்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் இந்தியா திரும்பவதற்குள் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

நாட்டில் நேருவுக்கு அடுத்தப்படியாக, நீண்ட காலம் பிரதமராகச் செயல்பட்டவர் இந்திரா காந்தி தான். லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்திற்கு பின், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. மக்கள் செல்வாக்கு மிகுந்த நேருவுக்குப் பிறகு, நாடு முழுவதும் இந்திராவே எளிய மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். இதுவே 1966-ல் இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமராக பதவியேற்க வழிவகுத்தது. தொடர்ந்து 11 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமர் பதவியை அலங்கரித்தார் இந்திரா.

வறுமையை எதிர்த்து போர் தொடுத்த இந்திரா, தனியார் வங்கிகளை தேசியமயமாக்கி, ஏழை, எளிய மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட்டார். நிலச் சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது, வேளாண்மையில் உற்பத்தியை பெருக்குவதற்கு பசுமைப் புரட்சி செய்ததது, சிக்கிம் பகுதியை இந்தியாவோடு இணைத்தது என பல்வேறு புரட்சிகர திட்டங்களை செயல்படுத்தினார். வங்காளதேசம் எனும் நாடு உருவாக மூலக்காரணமாக இருந்தவர். உலக வல்லரசுகளே வியக்கும் வகையில் அணு ஆயுத சோதனையை நடத்தி, இந்தியாவை அணுஆயுத பலம் வாய்ந்த நாடாக உலகிற்கு பிரகடனம் செய்தார் இந்திரா. நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார். அவர் கொண்டுவந்த நெருக்கடி நிலை நாட்டையே புரட்டி போட்டது. இதனால் 1977 தேர்தலில் இந்திரா காந்தி தோற்கடிக்கப்பட்டார்.

எமர்ஜென்சியால் இந்திரா காந்தி ஆட்சியிழந்ததால் பிரதமராக பொறுப்பேற்றார் மொரார்ஜி தேசாய். இந்தியாவில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நான்காவது பிரதமரான இவருக்கு, காங்கிரஸ் கட்சியை சேராத முதல் பிரதமர் என்ற பெருமையும் உண்டு. பூரண மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வந்தது, தங்கத்தின் விலை குறைய நடவடிக்கை எடுத்தது, கதர் மற்றும் கைத்தறி தொழிலுக்கு மறுவாழ்வு கொடுத்தது இவருக்கான சிறப்பு. பாகிஸ்தானுடன் அமைதி முயற்சியை மேற்கொண்டதால் அந்நாட்டின் உயரிய விருதான ‘நிஷான் – இ‘ விருதை பெற்றார் மொரார்ஜி. பாரத ரத்னாவையும் – நிஷான் – இ விருதையும் பெற்ற ஒரே இந்தியர் இவர்தான்.

ஜனதா கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளில் மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவியிலிருந்து விலகியதால், சரண் சிங் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரபிரதேசத்தின் நூர்பூரில் பிறந்த சரண்சிங், இந்திரா காங்கிரஸ் ஆதரவால் 1979 ஆண்டு பிரதமராக பதவியேற்றார். ஆனால் அரசியல் குழப்பங்களால் ஒருநாள் கூட நாடாளுமன்ற அவைக்கு செல்லாத பிரதமர் என பெயரெடுத்தார் சரண்சிங். பெரிதாக எதுவும் சொல்லிக்கொள்ள முடியாத நிலையிலேயே சரண்சிங் அரசு 1980 ஜனவரி 14ல் கவிழ்ந்தது.

 

இந்த நிலையில் தான், இந்திராகாந்தி மீண்டும் பிரதமராக தேர்வாகியிருந்தார். பஞ்சாப் பொற்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட ஆப்ரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை சீக்கியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த, தனது பாதுகாவலர்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் இந்திராகாந்தி. இதன் தொடர்ச்சியாக, பிரதமராக பதவியேற்றார் ராஜீவ் காந்தி. 1984 அக்டோபர் 31ம் தேதி பிரதமராகவும், காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்ற ராஜீவ், தனது கடமையை முன்னெடுத்தார். அண்டை நாடுகளுடன் நட்புறவை புதுப்பித்த ராஜீவ், தனது ஆட்சிக் காலத்தில், கணினி, தொலைத்தொடர்பு, தகவல் தொழில் நுட்பம் ஆகிய நவீன உத்திகளைக் கல்விப் பாடத்திட்டங்களில் புகுத்தி, மனித வளத்தை மேம்படுத்தி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார். 100 கோடி இந்தியர்கள், ‘கைபேசி’ சேவையின் பலனை அனுபவித்து வருவதற்கும் அவரே காரணம். இவர், காலத்தில்தான் சுற்றுச்சூழலுக்கென்று தனி அமைச்சகம் கொண்டு வரப்பட்டது. கட்சித் தாவல் தடைச்சட்டம் இயற்றப்பட்டது. வாக்களிக்கும் வயதை 21லிருந்து 18 ஆக குறைந்ததும், சிறப்புமிக்க பஞ்சாயத்துராஜ் சட்டம் இயற்றப்பட்டதும் இவரது ஆட்சியின் சாதனையே.

ராஜீவ் காந்திக்கு பிறகு, இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பதவி வகித்தவர் இடஒதுகீட்டு நாயகன் என அழைக்கபடும் வி.பி.சிங். 1989-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜனதா தளம், திமுக, தெலுங்கு தேசம் கட்சி, அசாம் கன பரிஷத் ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்தித்த தேசிய முன்னணிக்கு, இடதுசாரிகள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி வெளியில் இருந்து ஆதாவளித்ததால் வி.பி.சிங் பிரதமரானார். 1990ல் மண்டல் கமிஷன் பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடை வி.பி.சிங் அமல்படுத்தியது, இன்றுவரை கொண்டாடப்படுகிறது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக ஆதரவை விலக்கிக்கொண்டதால் ஆட்சியை இழந்தார் வி.பி.சிங். இவரது ராஜினாமாவை தொடர்ந்து, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சந்திர சேசர்.

உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர், தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கு ஆதரவாகவும், சமூகநீதி கொள்கைகளை அமல்படுத்துவதிலும் அதிக ஆர்வம் காட்டினார். சந்திரசேகர் பிரதமராக இருந்தபோதுதான் 1991ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக வந்த ராஜீவ்காந்தி உயிரிழப்பு படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த திமுக அரசைக் கலைத்தார் சந்திரசேகர். சந்திர சேகரின் பிரதமர் பதவி காலம் வெறும் 7 மாதங்கள் மட்டுமே நீடித்தது.

 

ராஜீவ்காந்தியின் மரணத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவரான நரசிம்ம ராவ், நாட்டின் 9வது பிரதமராக பதவியேற்றார். நேரு குடும்பத்தைச் சாராத காங்கிரஸின் முதல் பிரதமர் என்பதோடு, தென்னிந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமரும் அவர் தான். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்மராவ் 17 மொழிகளை பேசுவதில் வல்லவர். மோசமான நிலையில் இருந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இவருக்கு இருந்த மிக முக்கிய வேலையாக இருந்தது. கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்க நரசிம்ம ராவ், மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக்கினார். நிதியமைச்சர் மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட், பொருளாதாரத்தைத் தாராளமயமாக்கியது. தனியார் நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடு இந்தியாவில் அதிகரித்தது. சேமிப்பும் முதலீடும் ஊக்குவிக்கப்பட்ட நிலையில், வரி விகிதங்கள் குறைவாக இருந்தன. இதனால் இந்திய பொருளாதார சீர்த்திருத்தத்தின் தந்தை என நரசிம்ம ராவ் அழைக்கப்பட்டார்.

இவருக்கு பிறகு பிரதமரான வாஜ்பாய் அரசு வெறும் 16 நாட்கள் மட்டுமே நீடித்தது. இவரைத் தொடர்ந்து 1996 ஜூனில் பிரதமராக பதவியேற்றவர் தான் தேவேகவுடா. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் 11 வது பிரதமரானது ஒரு எதிர்பாராத நிகழ்வாக அமைந்தது. ஆனால் அதிகாரம் அவரை ஆட்டிப்படைக்கவில்லை, அதிகாரத்திற்காக அவர் ஒருபோதும் தனது சித்தாந்தத்தை விட்டுக்கொடுக்கவில்லை. கவுடாவின் அரசாங்கம் காங்கிரஸை சார்ந்திருந்தாலும், முக்கியமான விஷயங்கள் குறித்து பிரதமர் கட்சியை ஆலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்துவந்தது. 1997 ஏப்ரல் மாதம் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆட்சியை இழந்தார் தேவேகவுடா. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த இந்தர் குமார் குஜ்ரால் கூட்டணி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இவர்தான் அடுத்த பிரதமராகவும் தேர்வானார்.

குஜ்ரால் அரசு எடுத்த முடிவுகளில் ஒன்று திமுக தொடர்பானது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரணை நடத்திய ஜெயின் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையால், மத்திய ஐக்கிய முன்னணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்த காங்கிரஸ் கட்சியுடனும் மோதல் ஏற்பட்டது. மத்திய அரசில் திமுக அங்கம் வகித்ததுடன், அக்கட்சித் தலைவர்கள் சிலரும் அமைச்சர்களாக இருந்தனர். இதனால் திமுக மீதான குற்றச்சாட்டை ஏற்க மறுத்தார் குஜ்ரால். இதனால் காங்கிரஸ் ஆதரவை விலக்கிக்கொள்ள குஜ்ரால் ராஜினாமா செய்தார்.

1999ல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்றார் வாஜ்பாய். ஆனால் அவரது பதவிக் காலம் 13 மாதங்கள் மட்டுமே நீடித்தது. கூட்டணியில் இருந்த அதிமுக விலகிக் கொண்டதால், திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து பெருவாரியான இடங்களை கைப்பற்றி பிரதமரானார் வாஜ்பாய். இவரது ஆட்சியில்தான், பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டு, இந்தியா அணு ஆயுத நாடாக அறிவிக்கப்பட்டது. கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதற்கு வாஜ்பாயின் பங்கு முக்கியமானது. இதனால் கார்கில் நாயகன் என அழைக்கப்பட்டார். இவர் கொண்டு வந்த தங்க நாற்கர சாலை திட்டம் நாட்டின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக தற்போதுவரை கருதப்படுகிறது. பாரத் அலுமினியம் நிறுவனம், இந்துஸ்தான் சிங்க் நிறுவனம், இந்தியன் பெட்ரோ கெமிக்கல் கார்ப்பரேஷன் ஆகியவற்றை பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றி, தனியார் முதலீடுகள் அதிகளவில் ஈர்க்கப்பட்டது. வாஜ்பாய் பதவி காலத்தில் தொலைதொடர்பு துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சீர்த்திருத்தங்கள் தொலை தொடர்பு துறையில் மைல்கல்லாக அமைந்தது.

நாட்டின் 13வது பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங், பொருளாதரத்தை உலகரங்கில் உயர்த்தினார். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் 2006-ல் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தி ஊரக வளர்ச்சியை அதிகப்படுத்த உறுதுணையாக இருந்தார். மகளிருக்கு எதிரான வன்செயல்களைத் தடுக்கும் சட்டம் நாடு முழுதும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. மேலும் கையால் மலம் அள்ளுவதைத் தடை செய்யும் சட்டம், மறுவாழ்வுத் திட்டம் என்ற மாபெரும் இரண்டு திட்டங்களும் பெரும் வரவேற்ப்பை பெற்றன. அணுசக்தி ஒப்பந்தத்தில் சோனியா காந்தியின் சம்மதத்தின்பேரில் துணிச்சலான பல முடிவுகளை எடுத்தார். ஆக்கபூர்வப் பணிகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும் அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் போட வழிவகுத்தார். சீர்திருத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சம்பவம் அல்ல அது ஒரு தொடர் நிகழ்வு என தனது 10 ஆண்டு கால ஆட்சியின் பொது தெரிவித்தார் மன்மோகன் சிங். தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும்பங்கு வகித்தார்.

 

மன்மோகன் சிங்கிற்கு பிறகு இந்தியாவின் பதிநான்காவது பிரதமராக 2014 ல் பொறுப்பேற்றார் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. பிரதமரான பிறகு ஆகஸ்ட் 15, 2014 அன்று செங்கோட்டையில் நிகழ்த்திய தனது முதல் சுதந்திர உரையில் மேக் இன் இந்தியா, ஜீரோ டிபெக்ட் ஜீரோ எஃபெக்ட் என்ற இரண்டு திட்டங்களை அறிவித்தார் மோடி. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்தது. உலக நிறுவனங்களின் உற்பத்தியை இந்தியாவில் மேற்கொண்டு அதன் மூலம் எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யலாம் எனவும் மோடி தெரிவித்தார். தூய்மையான இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் துவக்கி வைத்தார். டிஜிட்டல் இந்தியா திட்டத்தை 2015, ஜூலை 1 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவை டிஜிட்டல் ஆற்றல் மிக்க தேசமாகவும், இந்திய சமூகத்தை அறிவுசார் சமூகமாகவும் உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டு பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துக்கும், இந்திய அரசுக்கும் இடையேயான ரஃபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு நவம்பர் 8, 2016 அன்று நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார் மோடி. மோடியின் இந்த நடவடிக்கை பெறும் விமர்சனத்திற்கு உள்ளானது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையை அமல்படுத்தும் நோக்கத்தில் 2017, ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. விலை உயர்வை தடுக்கவும், பொருட்கள் மற்றும் சேவைகளில் உள்ள வரி லாபம் நுகர்வோரை சென்றடையும் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. சீன அதிபர் ஷி ஜின் பிங்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கடந்த 2019 அக்டோபர் 11 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினர். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையை அணிந்திருந்த பிரதமர் மோடி மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்றுச் சின்னங்களைப் பற்றி சீன அதிபருக்கு விளக்கினார். இந்த சந்திப்பு உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெருமை உயர்த்தியது. தமிழ்நாடு, தமிழ் மக்கள் இருக்கும் இடங்களில் மேடையில் பேசும் போதெல்லாம் தமிழில் பேசுவதை மோடி வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக திருக்குறள், புறநானூறு போன்றவைகளை மேற்கோள் காட்டி பேசுவது அவரது வழக்கம். அதே போல பாரதியாரின் கவிதைகளையும் தமிழில் பேசி அசுத்துவார் மோதி. ஐக்கிய நாடுகள் சபையில் இவர் வழங்கிய உரை உலகெங்கும் பாராட்டப்பட்டது.

இப்படி பல பிரதமர்களை கண்டுள்ள இந்தியா, தொடர்ந்து ஜனநாயகம் எனும் மையநோக்குடன் தனது அடுத்தக்கட்ட வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டே இருக்கிறது. நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பங்கு கொண்டுள்ள பிரதமர்கள் தொடங்கி, அதிகாரத்தில் அமர்ந்து, சாதுர்யமாக காரியங்களை நடத்திக் காட்டிய நமது ஆளுமைகளை நாம் இத்தருணத்தில் நினைவுகூற வேண்டியது அவசியமாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.