வாலி திரைப்பட ரீமேக் வழக்கு-எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளபடி

வாலி திரைப்பட ரீமேக் விவகாரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வாலி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த…

வாலி திரைப்பட ரீமேக் விவகாரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வாலி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மகிப்பெரிய வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான  உரிமையை போனிகபூர் பெற்றிருந்தார். அதே நேரத்தில் இந்த படத்தை இந்தியில் இயக்க எஸ்.ஜே.சூர்யா திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், கதை எழுதியவருக்கே அக்கதை சொந்தம் என்ற அடிப்படையில் வாலி திரைப்படத்தை போனிகபூர் ரீமேக் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ஜே.சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்தியில் வாலி திரைப்படித்தின் ரீமேக்கை இயக்குவதற்கான வேலையை தொடங்குவதற்கு போனி கபூருக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஜே. சூர்யா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர். ஷா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஜே.சூர்யா-வின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் மூல வழக்கு தீர்ப்பை பொறுத்து திரைப்படத்திற்கான உரிமையை எஸ்.ஜே.சூர்யா கோர முடியும் என்றும், அதற்கான இழப்பீடு உள்ளிட்டவை எல்லாம் அதனடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.