ஓய்வு பெற்றாலும் நடவடிக்கை- உயர்நீதிமன்றம்

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் ஊழியர்கள் மீது ஓய்வு பெற்ற பிறகும் துறை ரீதியான நடடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த…

குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் ஊழியர்கள் மீது ஓய்வு பெற்ற பிறகும் துறை ரீதியான நடடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கணேசன் என்பவர் பட்டியல் இனத்தவர் என போலி சான்றிதழ் கொடுத்து மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே போலி சான்று தொடர்பான குற்ற வழக்கு விசாரணையில் உள்ள போது, துறை ரீதியான விசாரணை நடத்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம் 2013ல் தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து 2020ல் அணு ஆராய்ச்சி நிலையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் முகமது சபீக் அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒரே நேரத்தில் இரு விசாரணைகளையும் நடத்த தடையில்லை எனவும், தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உடனடியாக வழக்கு தொடர்ந்திருந்தால் ஓய்வூதியமும் நிறுத்தி வைக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், வழக்கில் தொடர்புடைய கணேசன் இத்தனை ஆண்டுகள் தொடர்ந்து சம்பளம் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் குடியரசு தலைவர் விருதும் வாங்கியுள்ளார். எனவே கட்டாய ஓய்வு வழங்குவதோடு, 40 சதவீதம் மட்டுமே ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டதோடு, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகும், அவர்கள் மீது துறை ரீதியான நடடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என யோசனை தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.