அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை-வைத்திலிங்கம்

அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை. கட்சிக்கு சம்பந்தம் இல்லாத அந்த 600 பேர் தான் கூச்சல் போட்டது என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். திமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. எடப்பாடி…

அன்று நடந்தது பொதுக்குழுவே இல்லை. கட்சிக்கு சம்பந்தம் இல்லாத அந்த 600 பேர் தான் கூச்சல் போட்டது என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

திமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இரண்டு துருவங்களாக பிரிந்து வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றம் உத்தரவு காரணமாக, கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு எடுக்கவில்லை. இதையடுத்து ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடக்கும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொதுக்குழு நடக்காது என்று கூறும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் டெல்லி பயணம், தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பயணம் செய்து தொண்டர்களை சந்திப்பது, எதிர் முகாமில் இருந்து ஆதரவாளர்களை இழுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஓ.பி.எஸ் ஆதரவாளரும், அந்தக் கட்சியின் மூத்தத் தலைவருமான வைத்திலிங்கம் தஞ்சையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “பொதுக்குழுவுக்கு பிறகு தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்க்கு செல்வாக்கு கூடியிருக்கிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பொதுக்குழுவுக்கு சென்ற பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் எல்லோரும் செல்வதற்கு முன்பே ஒரு 600 பேரை முன் பகுதியில் உட்கார வைத்துவிட்டனர். அவர்கள் தான் கூச்சல் போட்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும், எந்த வார்த்தையும் பேசவில்லை.

பொதுக்குழு உறுப்பினர்களாக இல்லாத ஆள்கள்தான் அந்த நிகழ்வு நடக்கக் காரணம். அவர்கள் பொதுக்குழுவே நடத்தவில்லை. கட்சி ஜனநாயகத்துக்கு புறம்பாக, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் பொதுக்குழு நடத்தினார்கள். நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக, தீர்மானம் கொண்டு வந்தது தவறு. அதனால் அதை எதிர்க்கிறோம் என்று சொல்லிவிட்டு நாங்கள் வெளியேறி விட்டோம். அங்கு சென்ற நிறைய பேர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு நடக்காது. ஓ.பி.எஸ்க்கு தமிழ்நாடு முழுவதும் நல்ல செல்வாக்கு இருக்கிறது. மதுரை மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.” என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.