சிபிஎம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் அஷிஸ் யெச்சூரி. இவர் சென்னையில் உள்ள இதழியல் கல்லூரியில் பயின்று, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, குருக்கிராமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கே முறையான சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் இன்று காலை 5.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது மரணத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். ’தங்கள் அன்பு மகன் ஆசிஸ் எச்சூரி அவர்கள் கொரோனா தாக்கி இறந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு குடும்ப உறுப்பினரின் மறைவை, ஆறுதல் மொழிகள் ஆற்றுப்படுத்தி விட முடியாது. இப்பெரும் துயரில் இருந்து நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் மீண்டு வரும் ஆற்றலை அளித்திட, இயற்கைத் தாயை இறைஞ்சுகின்றேன்’.
இவ்வாறு பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.







