இந்தியன் – 2 படப் பிரச்சனை; இரு தரப்பினருக்கும் நீதிமன்றம் அறிவுரை!

இந்தியன் – 2 படப்பிரச்சனையை இரு தரப்பினரும் பேசித் தீர்வு காண வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி…

இந்தியன் – 2 படப்பிரச்சனையை இரு தரப்பினரும் பேசித் தீர்வு காண வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வந்த படம் இந்தியன் – 2. இதனிடையே கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 19ம் தேதி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால், கமல் மற்றும் தயாரிப்பு நிறுவனம் லைகாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன்பின் கொரோனா பரவலால் ஏற்பட்ட ஊரடங்கால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன்பின் படப்பிடிப்புக்கு தமிழக அரசு அனுமதி அளித்தும் படப்பிடிப்புகள் தொடங்காமல் இருந்தது.

இதையடுத்து, அந்த படத்தில் நடித்த நடிகர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க துவங்கினர். இயக்குநர் ஷங்கரும் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த நிலையில், படப்பிடிப்பு பணிகள் 60% நிறைவடைந்ததால் ஷங்கர் படத்தை முடித்து தர உத்தரவிட வேண்டும். இந்தியன் – 2 படத்தை முடித்து கொடுக்காமல் ஷங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேலும், கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது என படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தியன் – 2 பட பிரச்சனை தொடர்பாக இரண்டு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும். நீதிமன்ற உத்தரவால் இந்த பிரச்சனையில் சுமூக சூழல் ஏற்படாது எனக்கூறி வழக்கு விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.