தடுப்பூசி வீணாவது இப்போது குறைந்துவிட்டது: சுகாதாரத்துறை செயலாளர்

தடுப்பூசி வீணாவது குறைந்துவிட்டது என்றும் சுகாதாரத்துறை மற்றும் முன்களப்பணியாளர்கள் உடனடியாக இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜூன் மாத நிலவரப்படி தமிழகத்திற்கு…

தடுப்பூசி வீணாவது குறைந்துவிட்டது என்றும் சுகாதாரத்துறை மற்றும் முன்களப்பணியாளர்கள் உடனடியாக இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத நிலவரப்படி தமிழகத்திற்கு மத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் திட்டத்தின் கீழ் 42.58 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், பல்வேறு கட்டங்களாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 85 ஆயிரம் கோவாக்ஸின் மற்றும் 3.65 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த 2 நாட்களாக தமிழகம் வந்தடைந்த நிலையில், இன்று பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசிகள் 1 லட்சத்து 26 ஆயிரத்து 270 டோஸ்கள், புனே சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 3 லட்சம் டோஸ்கள் என 4.26 லட்சம் தடுப்பூசிகள் இன்று வந்தடைந்தன.

தடுப்பூசி வருகையை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் ஆகியோர் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 3.2 லட்சம் தடுப்பூசி செலுத்தும் நிலை உள்ளது. சுகாதாரத்துறை மற்றும் முன்களப் பணியாளர்கள் உடனடியாக இரண்டாம் கட்ட தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

1436 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவ வல்லுநர் தங்களுடைய கருத்துக்களை அமைச்சரிடம் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். பொது சுகாதாரத்தை வாழ்கை முறையாக கடைபிடிக்கும் இடங்களில் தொற்று குறைந்து வருகிறது. தடுப்பூசி வீணாவது குறைந்துவிட்டது. முன்னர் 13 சதவீதமாக இருந்தது உண்மைதான், தற்போது 1 சதவீதமாக உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசியை உடனடியாக செலுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.