புது வகை எபோலா வைரஸிற்கு தடுப்பூசி – ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு…!

புது வகை எபோலா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

எபோலா என்பது ஒரு வைரஸ் நோயாகும். இது முதன்முதலில் 1976-ல் காங்கோவில் கண்டறியப்பட்டது. திடீர் காய்ச்சல், கடுமையான சோர்வு, தசை வலி, தலைவலி, தொண்டை வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

தற்போது புண்டிபுக்யோ எனப்படும் புதுவகை எபோலா வைரஸ் காங்கோவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தெற்கு சூடான் உட்பட அண்டை நாடுகளுக்கும் பரவும் அபாயத்தில் ஏற்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு (WHO) காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவல்களை இந்த மாதம் 17 ஆம் தேதி உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமாகப் பரிசோதிக்குமாறும், புண்டிபுக்யோ வைரஸ் கண்டறியப்பட்ட இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும் உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவுறுத்தியுள்ளது.

காங்கோவில் இதுவரை எபோலா வைரஸ் பாதிப்பால் 204 பேர் உயிரிழந்துள்ளனர். புது வகை எபோலா வைரஸ் என்பதால் இதற்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது சிகிச்சைகளோ இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் புது வகை எபோலா வைரஸிற்கு எதிரான ஒரு புதிய தடுப்பூசியை ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.