வாய்தா திரைப்பட நடிகை தீபா என்கிற பவுலினின் காணாமல் போன ஐபோனை போலீஸார் மீட்டுள்ளனர்.
அறிமுக இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘வாய்தா’. இந்தப் படத்தில் நடிகை தீபா என்கிற பவுலின் ஜெஸ்ஸிகா நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு முன்னதாக அவர் விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தின் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவின்யூவில் உள்ள தனது வீட்டில் நடிகை தீபா என்கிற பவுலின் (29) அண்மையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தீபாவின் செல்போனுக்கு அவரது உறவினர்கள் போன் செய்துள்ளனர். அவர் தொடர்ந்து போனை எடுக்காததால், அவரது நண்பர் பிரபாகரன் என்பவர் தீபாவின் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பவுலின் உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர். காதல் தோல்வியால் அவர் தஉயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பவுலின் உயிரை மாய்த்துக் கொண்டபோது முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து பவுலினின் ஐபோன் மீட்கப்பட்டுள்ளது.
நடிகை பவுலின் தீபா பயன்படுத்திய மூன்று செல்போன்கள், ஒரு டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக கோயம்பேடு போலீஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட ஐபோனில் தகவல்களோ அல்லது புகைப்படம் , வீடியோக்கள் எதுவும் டெலிட் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதற்காக தடயவியல் துறையின் ஆய்வுக்கு உட்படுத்த அனுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
நடிகை பவுலின் தீபா உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரம் தொடர்பாக பிரபாகரனிடம் கோயம்பேடு போலீஸார் கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி முடித்துள்ளனர். விசாரணையில், காதலன் சிராஜுதீன் வாங்கி கொடுத்த ஐபோன் என்பதால் அதை தாம் எடுத்து வந்ததாக தெரிவித்திருக்கிறார்.
உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக சிராஜுதினிடம் பவுலின் தீபா வாக்குவாதம் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து சிராஜுதீன் தம்மை உடனடியாக பவுலின் தீபா வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்டுள்ள மூன்று செல்போன்கள் மற்றும் டேப்-இல் உள்ள விவரங்கள் குறித்தும், அதன் அடிப்படையில் காதலன் சிராஜுதீனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கோயம்பேடு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா








