என்ஐஏ சோதனைக்கு எதிராக கேரளாவில் இன்று போராட்டம்:தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்

தேசிய புலனாய்வு முகமை நாடு முழுவதும் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் மீது நடத்திய சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று எஸ்டிபிஐ அமைப்பு சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட 15…

தேசிய புலனாய்வு முகமை நாடு முழுவதும் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள் மீது நடத்திய சோதனையை கண்டித்து கேரளாவில் இன்று எஸ்டிபிஐ அமைப்பு சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உட்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அமலாக்கத் துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய நிர்வாகிகளையும் கைது செய்தனர். இதனைக் கண்டித்து கேரளாவில் எஸ்டிபிஐ அமைப்பு சார்பில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்நிகையில் கேரளாவில் அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் வழக்கம்போல் இயக்கபட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இருந்து குமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் தமிழக அரசு பேருந்துகள் தமிழக எல்லையான களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.


அதே போன்று நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூரில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு, சுல்தான் புத்தேரி, கள்ளிக்கோட்டை, நிலம்பூர், கல்பெட்டா மற்றும் பாலக்காடு உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் செல்லும் தமிழக அரசின் 11 அரசு பேருந்துகள் பாதுகாப்பு கருதி இன்று ஒரு நாள் கேரளாவுக்கு செல்லாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை வழக்கம் போல் கேரளாவுக்கு தமிழக அரசு பேருந்துகள் இயங்கும் என போக்குவரத்து துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

– பரசுராமன்.ப

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.