உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்க உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தீரத் சிங் ராவத் பதவி வகித்து வந்தார். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் தீரத் சிங் ராவத் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அடுத்த ஆண்டு உத்தரகாண்ட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தீரத் சிங் ராவத்தை ராஜினாமா செய்யுமாறு கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதலமைச்சராகவும், சட்டமன்ற பாஜக தலைவராகவும் புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டார். அவர், டேராடூனில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை ஆளுநர் பேபி ராணி மௌர்யாவிடம் அளித்தார். இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட்டின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்க உள்ளார்.







