கொரோனா தடுப்பு வழிகாட்டு நடைமுறைகளை முறையாக கடைபிடித்தால் மட்டுமே ஊரடங்கில் தளர்வுகள் நீடிக்கும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளுடன், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார். இதில், நாளை முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வருவதால், வியாபாரிகள் தொற்று பரவல் அதிகரிக்காத வண்ணம் வியாபாரம் செய்வது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னையில் உள்ள வியாபாரிகள் மற்றும் கடையில் பணிபுரிபவர்களுக்கு தடுப்பூசி செலுத்த, சிறப்பு முகாம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும், பொதுமக்களிடமிருந்து ஒத்துழைப்பு வந்தால் மட்டுமே தொற்றை வெல்ல முடியும் என்றும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், சென்னையில் தொற்று பரவலை முழுமையாக தடுக்க, மக்கள் அதிகம் கூடும் 20 இடங்களை தேர்வு செய்து தனியாக கவனம் செலுத்தப்படும் என கூறினார். மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் சந்தைப்பகுதிகளில் உயர் கோபுரங்கள் அமைத்து கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.







