உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் பதவியிலிருந்து தீரத் சிங் ராவத் ராஜினாமா செய்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக, மக்களவை உறுப்பினராக பதவி வகித்து வந்த தீரத் சிங் ராவத் கடந்த மார்ச் 10ம் தேதி பொறுப்பேற்றார். 4 மாதங்களே ஆன நிலையில், நேற்றிரவு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகல் கடிதத்தை டேராடுனிலுள்ள ராஜ்பவனில் ஆளுநர் பேபி ராணி மயுர்யாவை நேரில் சந்தித்து அளித்தார்.
சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர், முதலமைச்சராக பொறுப்பேற்றால் அவர் அடுத்த 6 மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதி. அதன்படி, செப்டம்பர் 10ம் தேதிக்குள் ராவத் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனினும், கொரோனா பரவல் காரணமாக உத்தரகாண்டில் இடைத் தேர்தலை நடத்த முடியாத சூழல் தேர்தல் ஆணையத்திற்கு ஏற்பட்டது.
ஒரு வருடத்திற்கு குறைவாக சட்டமன்ற பதவிக்காலம் இருந்தாலும் இடைத் தேர்தல் நடத்தக் கூடாது என்பது விதி. 2022 பிப்ரவரி மாதம் உத்தரகாண்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், தன்னிடம் வேறு வாய்ப்புகள் இல்லாததால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் தீரத் சிங் ராவத்.
கடந்த வாரம் டெல்லி சென்ற தீரத் சிங் ராவத், அங்கு உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசினார். மீண்டும் அழைப்பு வரவே நேற்று காலை டெல்லி சென்று, பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “உத்தரகாண்ட் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், 2022ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் குறித்தும் விவாதித்தோம்” என்றார். இடைத் தேர்தல் தொடர்பான கேள்விக்கு, அதுபற்றி தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் எனவும் குறிப்பிட்ட நிலையில், ராஜினாமா செய்துள்ளார்.
இன்று மாலை 3 மணிக்கு மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மத்திய குழு பிரதிநிதியாக வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கலந்துகொள்கிறார். அதில், புதிய முதலமைச்சர் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







