சாலை விபத்தில் உத்ரகாண்ட் முன்னாள் முதலமைச்சருக்கு லேசான காயம்!

உத்ரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஸ் ராவத் சாலை விபத்தில் சிக்கி  லேசான  காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  உத்ரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் ஹரீஸ் ராவத்.  இவர் மத்திய அமைச்சராகவும், 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும்…

உத்ரகாண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹரிஸ் ராவத் சாலை விபத்தில் சிக்கி  லேசான  காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உத்ரகாண்ட் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தவர் ஹரீஸ் ராவத்.  இவர் மத்திய அமைச்சராகவும், 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக அறியப்படும் ஹாரிஸ் ராவத் நேற்று சாலை விபத்தில் சிக்கி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

ஹரீஸ் ராவத் ஹல்த்வானியிலிருந்து உதம் சிங் நகரின் காஷிபூருக்குச் சென்று கொண்டிருந்த போது அவரது கார் சாலையின் குறுக்கே உள்ள தடுப்பில் மோதியது. இதனைத் தொடர்ந்து காரில் இருந்த ஹரீஸ் ராவத் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஹரீஸ் ராவத் சாலை விபத்தில் சிக்கிய செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பலரும் அவரது உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பியும்,  ஆறுதல் தெரிவித்தும் வந்தனர். இதனைத் தொடர்ந்து ஹரீஸ் ராவத் தனது எக்ஸ் தளத்தில் சாலை விபத்து குறித்து பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்ததாவது..

“ சாலை விபத்தில் சிக்கி லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமாக உள்ளேன்.  மருத்துவர்கள் நான் நன்றாக இருப்பதால் என்னை டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள்.  சில நண்பர்கள் இந்தச் சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இது சிலரிடையே கவலையை ஏற்படுத்தக்கூடும். கவலைப்பட ஒன்றுமில்லை.  நான் முற்றிலும் நலமாக உள்ளேன்,  எனது சக ஊழியர்களும் நலமாக உள்ளனர்”  என ஹரீஸ் ராவத் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.