அமெரிக்கா: புலம்பெயர்ந்தோர் பலி எண்ணிக்கை 50ஆக உயர்வு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டியோகாவின் புறநகர் பகுதியில் கண்டெய்னர் லாரியில் உயிரிழந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவில் நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி ஒன்று…

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டியோகாவின் புறநகர் பகுதியில் கண்டெய்னர் லாரியில் உயிரிழந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவில் நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்றுகொண்டிருந்தது.
மாலை 6 மணியளவில் அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர் லாரி அருகே சென்றுபார்த்தபோது லாரிக்குள் இருந்து உதவி கேட்டு குரல் கேட்டிருக்கிறது.

உடனடியாக, இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கண்டெய்னரை திறந்து பார்த்தனர்.
50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. கண்டெய்னரில் இருந்தவர்களை பரிசோதித்ததில் 46 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவக் குழு தெரிவித்தது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் இருந்து வந்ததும் லாரிக்குள் இருந்த அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்தோடு வந்த அகதிகள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

39.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்ததாலும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களாலும் லாரி கண்டெய்னரில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில், குடிநீர் இல்லாததாலும் அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டெய்னர் லாரியை யாரும் இல்லாத இடத்தில் நிறுத்திவிட்டு லாரி டிரைவர் தப்பிச்சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவங்களின்போது உயிரிழப்புகளும் அரங்கேறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் இரங்கல்:

வடஅமெரிக்க நாடான மெக்ஸிகோவின் அதிபர் ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “அமெரிக்க அதிபர் பைடனை ஜூலை 12ம் தேதி வாஷிங்டனில் சந்திக்கவுள்ளேன். அப்போது, புலம்பெயர்வு பிரச்னை முக்கிய விவாதமாக இருக்கும்” என்றார்.

மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரார்டு டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “மேலும் 19 பேர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவில்லை” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.