முக்கிய பதவிக்கு இந்திய வம்சாவளியினர் பெயரை பரிந்துரைத்த அமெரிக்க அதிபர்!

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகனில் முக்கியப் பொறுப்புக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான ராதா ஐயங்கார் பிளம்பின் பெயரை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். அமெரிக்க பாதுகாப்புத் துறை துணை அமைச்சரான…

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் தலைமையகமான பென்டகனில் முக்கியப் பொறுப்புக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான ராதா ஐயங்கார் பிளம்பின் பெயரை அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை துணை அமைச்சரான காத்லீன் எச் ஹிக்ஸுடன் இணைந்து முக்கிய பொறுப்பை வகித்து வந்த ராதா ஐயங்கார் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அவர் பாதுகாப்புத் துறை துணைச் செயலர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகிறார்.

யார் இந்த ராதா ஐயங்கார்?

ராதா ஐயங்கரா், அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு அமெரிக்காவில் கூகுள், பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்தார். கூகுளில் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரிந்தார். அதற்கு முன் பொருளாதார நிபுணராகவும் இருந்தார்.

அமெரிக்க பாதுகாப்புத் துறை, எரிசக்தித் துறை மற்றும் வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றில் தேசியப் பாதுகாப்பு பிரச்னைகள் குறித்த பல முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். பிளம்ப், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் உதவி பேராசிரியராக இருந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் தனது முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

அறிவியல் ஆலோசகராக இந்தியப் பெண் !

இதனிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகராக இந்திய வம்சாவளியினரான ஆர்த்தி பிரபாகர் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

அமெரிக்க அரசின் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு அதிபர் தனக்கென நியமிக்கப்பட்டுள்ள அறிவியல் ஆலோசகரிடம் கருத்துக்களை கேட்டுதான் அறிவிப்புகளை வெளியிடுவார்.

யார் இந்த ஆர்த்தி பிரபாகர்?

ஆர்த்தி பிரபாகர்

63 வயதாகவும் ஆர்த்தி பிரபாகர் 1959 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்தவராவார். சிறுவயதிலேயே அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த அவர், டெக்சாஸ் நகரத்தில் பள்ளிக் கல்வியை முடித்தார். கலிபோர்னியா இன்ஸ்டிடியூஃப் ஆஃப் டெக்னாலஜியில் கடந்த 1984 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்ற ஆர்த்தி, பின்னர் அரசு பணியில் சேர்ந்தார்.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் அமெரிக்க அதிபர் பைடன், 2 அமெரிக்கத் தூதர்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை பரிந்துரை செய்தார். அவர்களில் ஒருவர் புனீத் தல்வார் மொராக்கோவுக்கான அமெரிக்கத் தூதராகவும், நெதர்லாந்துக்கான அமெரிக்கத் தூதராக ஷெஃபாலி ரஸ்தான் துக்கலையும் அதிபர் பைடன் நியமித்தார்.

ஸ்லோவாக்கியாவுக்கான புதிய அமெரிக்க தூதராக இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட கவுதம் ராணாவை அமெரிக்க அதிபர் பைடன் பரிந்துரைக்க உள்ளதாக வெள்ளை மாளிகை கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்னா சச்தேவா கோர்ஹோனெனை மாலிக்கான அமெரிக்கத் தூதராக நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.