சட்டப்பேரவை குழுக்களுக்கு உறுப்பினர்கள் தேர்வு – வேட்புமனு தாக்கல் செய்ய காலக்கெடு அறிவிப்பு!

சட்டப்பேரவை குழுக்களுக்கான தேர்தல் ஒற்றை வாக்கு முறையில் நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற முன்னவரும் வருவாய்த் துறை அமைச்சருமான செங்கோட்டையன் அவை உரிமை குழு உள்ளிட்ட சட்டபேரவைக் குழுக்களை அரசினர் தீர்மானங்களை முன்மொழிந்தார். அதில் 2026–27ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டுக் குழுவில் 16 உறுப்பினர்களையும், பொது கணக்குக் குழுவில் 16 உறுப்பினர்களையும், பொதுத்துறை நிறுவனங்கள் குழுவில் 16 உறுப்பினர்களையும், உரிமைக் குழுவில் 14 உறுப்பினர்களையும் தேர்வு செய்வது தொடர்பான அரசினர் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சபாநாயகர், பேரவை குழுக்களுக்கான தேர்தல் ஒற்றை வாக்கு முறையில் நடைபெறும் என தெரிவித்தார்.

பேரவைத் தலைவர் வகுத்துள்ள விதிகளின்படி, மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, பொதுத்துறை நிறுவனங்கள் குழு மற்றும் உரிமைக் குழு ஆகியவற்றுக்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வேட்புமனுக்களை 2026 செப்டம்பர் 3 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்குள் சட்டப்பேரவைச் செயலாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.

வேட்புமனுப் படிவங்களை சட்டப்பேரவைச் செயலாளரிடம் பெற்றுக்கொள்ளலாம். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செப்டம்பர் 3ஆம் தேதி மாலை 5 மணிக்கு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். தேர்தலில் இருந்து விலக விரும்பும் வேட்பாளர்கள், செப்டம்பர் 7ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு குழுவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், குழுக்களுக்கான தேர்தல் நடைபெறும், நாள் பின்னர் அறிவிக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.