அடுத்த தலைமுறை கைகளுக்குச் செல்கிறது ரிலையன்ஸ்!

குறுகிய காலத்தில் முன்னணி நிறுவனமாக வளர்ச்சி பெற்ற ஜியோ தொலை தொடர்பு நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் அறிவோம். இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின்…

குறுகிய காலத்தில் முன்னணி நிறுவனமாக வளர்ச்சி பெற்ற ஜியோ தொலை தொடர்பு நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். அவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் அறிவோம்.

இந்தியாவின் முன்னணி தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஈடுபடாத தொழில்களே இல்லை என கூறும் அளவுக்கு, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கச்சா எண்ணெய் முதல் தொலை தொடர்பு நிறுவனம், சில்லறை விற்பனை என அனைத்திலும் கொடி கட்டிப் பறக்கின்றன ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள்.

ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம், ஆரம்பித்த சில ஆண்டுகளில் சந்தாதாரர்கள் எண்ணிக்கையிலும், வருவாய் அடிப்படையிலும் பெருவளர்ச்சியை பெற்றது. 2014-15 ஆம் ஆண்டுகளில் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் தொடங்க முடிவெடுக்கப்பட்ட குழுவில், ஆரம்பம் முதல் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி முக்கிய இடம் வகித்தார். ஜியோவின் ஒவ்வொரு, வர்த்தக ரீதியிலான திட்ட செயல்பாடுகள் அனைத்திலும், ஆகாசின் பங்களிப்பு இருந்தது. அமெரிக்காவின் பிரவுன் பல்கலைகழகத்தில் பி.ஏ பொருளாதாரம் பயின்றவர் ஆகாஷ் அம்பானி.

2016ம் ஆண்டு ஜியோ முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ஜியோ சிம்கார்டுகளை, சில மாதங்கள் வரை இலவசமாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. இதில் இடம்பெற்ற அம்சங்கள், இந்திய தொலை தொடர்பு சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

முதலில் இலவச டேட்டா, இலவச டாக் டைம் என பயணித்த ஜியோ, அடுத்தகட்டமாக 4 ஜி அலைவரிசையை பயன்படுத்த தேவைப்படும் ஸ்மார்ட் போன் வகை செல்போன்களை குறைந்த விலையில் வழங்கியது. இந்த செல்போனில், ஜியோ நிறுவனத்தின் சேவையை மட்டுமே பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டதால், சந்தாதாரர்கள் தொடர்ந்து ஜியோ வாடிக்கையாளராக தொடர்ந்தனர்.

தற்போது ஜியோவில் அலைபேசி சேவை, 4 ஜி அலை வரிசை சேவைகள் மட்டுமின்றி சொந்தமாகவே மைஜியோ, ஜியோசாட், ஜியோபிளே, ஜியோமணி, ஜியோடிரைவ், ஜியோ ஆன் டிமாண்டு, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ ஜாய்ன் என பல செயலிகள் உள்ளன. குறுகிய காலத்தில் 43 கோடி எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை கொண்டு, ரூபாய் 90 ஆயிரம் கோடி வர்த்தகம் புரியும் நிறுவனமாக ஜியோ உள்ளது.

இதுவரை ஜியோ நிறுவன தலைவராக முகேஷ் அம்பானி இருந்தார். நிறுவனத்தை அடுத்த தலைமுறையின் நிர்வாகத்திற்கு கொண்டு செல்வது என்று முடிவெடுத்துள்ளது ரிலையன்ஸ் குழுமம், இதையடுத்து, ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி விலகியுள்ளார். மேலும் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நிறுவனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பங்கஜ் மோகன் பவார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிக்க நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.

2022ஆம் ஆண்டில், தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, தமது குழந்தைகள் அதிக பொறுப்புகளை எடுத்துக்கொள்வதாக அம்பானி கூறினார். ரிலையன்ஸின் நிறுவனரான தனது தந்தை திருபாய் அம்பானியின், வர்த்தக செயல்பாட்டில் புதுமை என்ற தீப்பொறியையும், ஆற்றலையும், தனது குழந்தைகளிடமும் காண்பதாக முகேஷ் அம்பானி கூறியுள்ளதாகவும் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

– ரா. தங்கபாண்டியன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.