பால் உற்பத்தியாளர்களுக்கு விபத்து இழப்பீடு உயர்வு – அமைச்சர் விஜயலட்சுமி அறிவிப்பு!

சட்டப்பேரவையில் பால்வளத்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அத்துறை அமைச்சர் விஜயலட்சுமி அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பால்வளத்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் விஜயலட்சுமி அறிவித்தார். அதன்படி

பால் உற்பத்தியாளர்களுக்கு விபத்து இழப்பீடு மற்றும் நிதியுதவி உயர்வு
பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நலநிதி திட்டத்தின் கீழ், விபத்து இறப்பு இழப்பீடு ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாகவும், இரண்டு உறுப்புகளை இழந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.2.50 இலட்சமாகவும், பெண் குழந்தைகளின் திருமண உதவித்தொகை ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

ஒருங்கிணைந்த தன்னியக்கமாக்கும் முறை
பால் கொள்முதலில் வெளிப்படைத்தன்மை, தடமறிதல் (Traceability) மற்றும் பொறுப்புடைமையை மேம்படுத்தும் வகையில், பால் பண்ணைகளில் தொடக்கம் முதல் இறுதி வரை ஒருங்கிணைந்த தன்னியக்கமாக்கும் முறை (End-to-End Automation) ரூ.5 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

கன்று வளர்ப்பு, இனவிருத்தி மேலாண்மை பணிகள்
ரூ. 10 கோடியில் ஜெர்சி கலப்பின கன்றுகளில் பால் உற்பத்தி திறன் மேம்படுத்த விஞ்ஞான பூர்வமான கன்று வளர்ப்பு மற்றும் இனவிருத்தி மேலாண்மை பணிகள் செயல்படுத்தப்படும்.

இனவிருத்தி மேலாண்மை பணிகள்
ரூ. 10 கோடியில் கறவை மாடுகளில் கன்று ஈனும் கால இடைவெளியை குறைக்கும் வகையில் இனவிருத்தி மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்படும்.

தொகுப்பு குளிர்விப்பு நிலையங்கள்
ரூ. 25.45 கோடியில் கிராமப்புறங்களில் கொள்முதல் செய்யப்படும் ஆரம்ப நிலை பாலின் தரத்தினை பாதுகாக்க 60 தொகுப்பு பால் குளிர்விப்பான்கள் மற்றும் 40 தொகுப்பு குளிர்விப்பு நிலையங்களுக்கான கட்டிடங்கள் நிறுவப்படும்.

செயற்கைமுறை கருவூட்டல்
பணியாளர்களுக்கு பயிற்சி செயற்கைமுறை கருவூட்டல் பணிக்காக 100 புதிய செயற்கைமுறை கருவூட்டல் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

அதிநவீன ஆவின் பாலகங்கள்
ஆவின் பால் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நாமக்கல், கரூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வணிக உரிமம் முறையில் (Business Franchisee) 10 புதிய அதிநவீன ஆவின் பாலகங்கள் அமைக்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஆவின் பாலகங்கள்
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் மற்றும் பொதுமக்களுக்கு ஆவின் பால் பொருட்கள் எளிதில் கிடைக்கும் வகையில், (Business Franchisee) புதிய பாலகங்கள் அமைக்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.