ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் தலைவராக முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கி வருவது ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம். இதன் தலைவராக முகேஷ் அம்பானி இருந்து வந்தார். இவரது மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் Non Executive Director ஆக இருந்து வந்தார்.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் சார்பில் பங்குச் சந்தையில் அளிக்கப்பட்டுள்ள ஆவணத்தில், நிறுவனத்தின் புதிய இயக்குநராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகாஷ் அம்பானிக்கு தற்போது 30 வயதாகிறது.
கடந்த 27ம் தேதி நடைபெற்ற நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில், இதற்கான ஒப்புதல் பெறப்பட்டதற்கான ஆவணமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து முகேஷ் அம்பானி விலகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானி – நீட்டா அம்பானி தம்பதியருக்கு ஆகாஷ், ஆனந்த் என இரு மகன்களும், ஈஷா எனும் மகளும் உள்ளனர். அனைவருக்குமே திருமணமாகிவிட்டது.
கடந்த 2017ம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் ஜியோ போன்கள் அறிமுகப்பட்டதிலும், போட்டி நிறுவனங்கள் கையகப்படுத்தப்பட்டதிலும் முக்கிய பங்கு வகித்தவர் ஆகாஷ் அம்பானி என்றும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வர்த்தகத்தை வளர்த்தெடுத்ததில் இவரது பங்களிப்பு அளப்பரியது என்றும் கூறப்படுகிறது. அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகம், ஈஷா அம்பானிக்கு அளிக்கப்பட்டுள்ளது. 26 வயதாகும் ஆனந்த் அம்பானி, Reliance Retail Ventures and on Jio Platforms-ன் இயக்குநராக இருக்கிறார்.











