அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் 3வது சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ் முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் கடந்த இரு தினங்களுக்கு முன் தொடங்கியது. பெண்கள் ஒற்றையர் பிரிவில், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தொடக்க சுற்றில் மான்டினீக்ரோ நாட்டு வீராங்கனை கோவினிச்சை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
2வது சுற்று போட்டியில் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட்டை 7-6 (4), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
40 வயதான செரீனா இந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடருடன் டென்னிசில் போட்டியில் இருந்து விடைபெற முடிவு செய்து இருப்பதால் அவரது ஆட்டத்தை காண ரசிகர்கள் கூட்டம் ஸ்டேடியத்தில் திரண்டு உற்சாகப்படுத்தினர். அடுத்த சுற்றில் செரீனா, ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிக்கை சந்திக்கிறார்.







