ஜியோவின் 5ஜி சேவை வரும் தீபாவளி பண்டிகைக்குள் அறிமுகமாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜியோவின் 11 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள பைபர் ஆப்டிக் நெட்வொர்க் மூலம் பூமியை 27 முறை சுற்றி வர முடியும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது அரசு அமைப்புகள் ,தனியார் நிறுவனங்கள், சேவைத்துறை மட்டுமின்றி உற்பத்தி துறையிலும் 4ஜியை விட மேம்படுத்தப்பட்ட அடுத்தகட்ட தொழில்நுட்பம் தேவைப்படுகிறது. இந்த மேம்பட்ட சேவையை 5-ஜி அலைக்கற்றையால் வழங்க முடியும் என தொலை தொடர்பு நிபுணர்கள் கூறுகின்றனர். ரிலையன்ஸ் தொழில் குழுமத்தின் ஜியோ நிறுவனம், 4ஜி அலைக்கற்றை சேவையை வழங்குவதுடன் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமாகவும் உள்ளது.
கடந்த மாதம் 5 ஜி அலைக்கற்றைக்கான ஏலம் நடைபெற்றது. இதில், ஜியோ, ஏர்டெல்,அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. ஜியோ முதன் முதலில் 5ஜி சேவையை வழங்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ரிலையன்ஸ் குழுமத்தின் 45வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பங்குதாரர்களிடையே பேசிய ரிலையன்ஸ் தலைவரும், ஜியோ நிறுவனருமான முகேஷ் அம்பானி வரும் தீபாவளி பண்டிகைக்குள் 5ஜி சேவை சென்னை, மும்பை, புது டெல்லி, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அடுத்த கட்டமாக நாடு முழுவதும் 5 ஜி சேவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஜியோ நெட்வொர்க்கில் 42 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்துகிறார்கள். 5ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுப்படுத்த 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும். இதனால், வேகமாக 5ஜி சேவை கிடைக்க வழி ஏற்படும். 2023ம் ஆண்டு, டிசம்பருக்குள் பெரு நகரம், நகரம், வட்டாரம், கிராமம் என நாடு முழுவதும் 5ஜி சேவையை வழங்க இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். 
இந்திய அரசிடம் 5ஜி அலைக்கற்றையை பெற, ஜியோ 88 ஆயிரம் கோடி ரூபாயை கட்டணமாக செலுத்தியுள்ளது. அதிகப்படியான 5ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடாக பெற்றுள்ள ஜியோ, தற்போது 33 லட்சம் சதுர கிலோமீட்டர் அளவிலான ஃபைபர் நெட்வொர்க் வைத்துள்ளது. இதை விரிவாக்கம் செய்யும் போது, 4 ஜி மற்றும் 5 ஜி இணைந்து, கலவையான ஸ்பெக்ட்ரம் மூலம் அதிவேக இண்டர்நெட் இணைப்பை அளிக்க முடியும். இந்தியாவில் முதன்முறையாக ரிலையன்ஸ் ஜியோ TRUE 5G சேவை அளிக்க உள்ளதாக ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
ஜியோ – உருவாக்கியுள்ள ஸ்டேண்ட் அலோன் கட்டமைப்பால் அதிவேக இன்டெர்நெட் சேவை கிடைக்கும். மேலும் தற்போது பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களில் உள்ள 4ஜி நெட்வொர்க்கை வைத்தே 5ஜி சேவையை பெற முடியும். இதற்காக ஜியோ 5 ஜி-க்கான சாப்ட்வேர் அப்டேட் மட்டும் போதுமானதாக இருக்கும்.
ஜியோவின் உயர்தர சேவை, சலுகை விலையில் பைபர் ஆப்டிக் நெட்வொர்க் நாடு முழுவதும் கொண்டு வரப்படும். ஜியோ 5G ஆனது கம்பிகள் இல்லாமல் காற்றில் அதி-உயர் ஃபைபர் போன்ற வேகத்தை வழங்குகிறது.
அதை ஜியோ ஏர் ஃபைபர் என்று அழைக்கப்படுகிறது. ஜியோ ஏர்ஃபைபர் மூலம் வீடு அல்லது அலுவலகத்தை ஜிகாபிட் வேக இணையத்துடன் விரைவாக இணைப்பது எளிதாக இருக்கும் எனவும் ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.
-ரா. தங்கபாண்டியன்







