இந்திய எல்லை அருகே சீனா புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்தியா வந்துள்ள அமெரிக்க ராணுவத் தளபதி சார்ல்ஸ் பிளின், இந்திய ராணுவத் தளபதி மனோஜ் பாண்டேவை டெல்லியில் சந்தித்து, இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீனாவின் செயல்பாடு குறித்து கடுமையாக விமர்சித்தார். சீர்குலைவை ஏற்படுத்தும் நோக்கிலும், பிற நாடுகளின் எல்லைகளை அரிக்கும் நோக்கிலும் சீனா செயல்பட்டு வருவதாக அவர் குற்றம் சாட்டினார். சீனாவின் இத்தகைய அணுகுமுறை அந்த நாட்டுக்கு உதவாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சீனா தனது மேற்குப் பிராந்தியத்தில் – அதாவது இந்திய எல்லையில் – புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்த சார்ல்ஸ் பிளின், இது எச்சரிக்கை அடைய வேண்டிய நேரம் என கூறினார்.
லடாக் யூனியன் பிரதேசத்தை ஒட்டிய சீனாவின் படைக்குவிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளதாகவும், சீனாவின் உள்நோக்கம் என்ன என்பது குறித்து அந்த நாட்டிடம் இருந்துதான் பதில் பெற வேண்டும் என்றும் சார்ல்ஸ் பிளின் தெரிவித்தார்.
இந்தியாவிடம் சீனா எப்படி நடந்து கொள்ளும் என்பது மிகவும் முக்கியமானதுதான் என்றாலும், அந்த நாடு சொல்வது ஒன்று செய்வது ஒன்று என இயங்கக்கூடியது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று சார்ல்ஸ் பிளின் குறிப்பிட்டார்.
லடாக் மோதலை அடுத்து இந்திய – சீன எல்லையில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலான படை வீரர்கள் இரு தரப்பிலும் குவிக்கப்பட்டுள்ளனர். சுமூகமாக படைகளை திரும்பப் பெற்றுக்கொள்வது தொடர்பாக இதுவரை 15 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதும் இதுவரை குறிப்பிடும்படியான முன்னேற்றம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.









