சீனாவில் ஜனநாயகத்திற்காக போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதன் 33ம் ஆண்டை முன்னிட்டு, போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
பேச்சுரிமை, ஊழல் ஒழிப்பு, அரசுக்கான பொறுப்பு ஆகியவற்றை வலியுறுத்தி கடந்த 1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் போராட்டம் தொடங்கியது. ஜனநாயகத்தை வலியுறுத்தும் நோக்கில் அமைதி வழியில் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், சீன அரசு போராட்டத்தை ஒடுக்க திட்டமிட்டு வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
1989, ஜூன் 4ம் தேதி தியானமென் சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர். எனினும், எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவலை சீன அரசு தெரிவிக்கவில்லை.
சீன ராணுவத்தின் இந்த தாக்குதலை அடுத்து, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் சீனாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தன.
இந்நிலையில், தியானமென் சதுக்கத்தில் நடைபெற்ற ராணுவ நடவடிக்கையின் 33ம் ஆண்டை ஒட்டி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கென் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஜனநாயகத்தை வலியுறுத்தி தியானமென் சதுக்கத்தில் அமைதி வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு 33 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தைரியத்தை உலகம் தொடர்ந்து நினைவு கூர்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தியானமென் சதுக்கத்தில் உயிர்நீத்தவர்களுக்காக எழுப்பப்பட்ட நினைவகங்களை அப்புறப்படுத்தவும், வரலாற்றை அழிக்கவும் முயற்சிகள் நடந்தபோதும் அந்த வரலாற்றுச் சம்பவம் மக்களின் நினைவுகளில் நீடித்திருப்பதாகத் தெரிவித்துள்ள பிளிங்கன், போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.