நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் 1-வது வார்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும் எனத் தெரிவித்தார். 48 வார்டுகளில் 33 வார்டுகளுக்கு மேல் அதிமுக வெற்றி பெறும் என அவர் கூறினார்.
இதேபோன்று, நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகள் மற்றும் தலைஞாயிறு பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைஞாயிறு அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் வாக்களித்தார்.
கோவை சுகுணாபுரம் அரசு உயர்நிலைபள்ளியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதால் கோவை மக்கள் முழுமையாக அதிமுகவிற்கு வாக்களிப்பார்கள் எனத் தெரிவித்தார். மேலும், கோவையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக திமுக பல விதிமீறல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.
மதுரை மீனாட்சி மகளிர் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர் விஜய் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதாக குறிப்பிட்டார். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய அவர், யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை வாக்களார்கள் அறிந்து கொள்ள முடியவில்லை என்று தெரிவித்தார். மேலும், தேர்தலில் அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார்.
இதேபோன்று, சென்னை மாநகராட்சியின் 126 வது வார்டு மந்தவெளியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று குற்றஞ்சாட்டினார். மேலும், கோவையில் குண்டர்கள் யாரும் இல்லை என முதல்வர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.







