சென்னை வந்தடைந்த அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டார்!

சென்னை வந்தடைந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி ஹெலிகாப்டரில் திருவண்ணாமலை புறப்பட்டுச் சென்றார்.

மத்திய உள்துறை அமைச்சர்அமித்ஷா தமிழகம் மற்றும் புதுவையில் இன்று முதல் 2 நாட்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். மகாராஷ்டிரத்தில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு தனி விமானம் மூலம் சென்னை வந்த அவர், இங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

திருவண்ணாமலை சென்றடைந்ததும், கிரிவலப் பாதையில் உள்ள ரமண ஆசிரமத்துக்குச் செல்லும் அமித்ஷா, அங்கு சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்கிறார். தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். வழிபாடுகளை முடித்துக்கொண்டு மாலை சாலை மார்க்கமாக புதுச்சேரிக்குப் புறப்படுகிறார்.

அமித்ஷாவின் வருகையையொட்டி திருவண்ணாமலையில் காவல்துறை சார்பில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், உள்துறை அமைச்சர் அமித்ஷா பயணிக்கும் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.