கச்சத்தீவை மீட்கக்கோரிய வழக்கு: 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

உச்சநீதிமன்றம் கச்சத்தீவை மீட்கக்கோரிய திமுக, அதிமுக தொடர்ந்த வழக்கை 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.

கச்சத்தீவை மீட்கக்கோரி அ.தி.மு.க, தி.மு.க, மீனவர்கள் அமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் சஞ்சீவ் சச்தேவா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது =தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஹரிப்பிரியா:

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துப்பதற்கான உரிமை இருந்தும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள், இதனை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்

அதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர்:

எல்லை தாண்டி மீனவர்கள் செல்லும்போது மட்டுமே இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகிறார்கள் இந்திய கடல் எல்லைக்குள் எவரும் கைது செய்யப்படுவதில்லை. மீனவர்களை விடுவிப்பதற்கு கைது செய்யாமல் இருப்பதற்கும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.

அதேவேளையில், கச்சத்தீவு விவகாரத்தை பொருத்தவரை இலங்கை, இந்தியா நாடுகளுக்கு இடையேயான ராஜாங்க ரீதியிலான விவகாரம் என்பதால் இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தார்.

அப்போது தி.மு.க.வின் டி.ஆர்.பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்

கட்சத்தீவு என்பது முன்னதாக இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது. கச்சத்தீவு விவகாரத்தை பொருத்தமட்டில் மீனவர்களுக்கு பிரச்சனை பெரிதாக உள்ளது, 12 நாட்டிக்கல் எல்லையை இந்திய மீனவர்கள் கடக்கும் பொழுது இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது என்பது மிகவும் வருத்தமான ஒன்றாகும். இந்தியா இலங்கை இரு நாடுகளிடையே போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி மீனவர்கள் கச்சத்தீவு வருகை மீன்பிடிப்பதற்கு உரிமை உள்ளது ஆனால் , இலங்கை அரசு தொடர்ந்து ஒப்பந்தத்தை மீறி வருவதாக தெரிவித்தார். எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு இலங்கை அரசுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி ஒரு தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தினார்

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கச்சத்தீவு விவகாரம் இரு நாடுகயளின் ராஜாங்க ரீதியிலானது.

அதே வேளையில் இந்திய மீனவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வழக்கின் விசாரணையை 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.