ஜாமீன் மறுக்கப்பட்டதால் கார் மீது மோதலா? நீதிபதி புகாரால் பரபரப்பு

ஜாமீன் மறுக்கப்பட்டதால், தனது கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக நீதிபதி கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பதேப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது அகமத்.…

ஜாமீன் மறுக்கப்பட்டதால், தனது கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாக நீதிபதி கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பதேப்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி முகமது அகமத். பிராயக்ராஜில் இருந்து இவர் பதேப்பூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது சொகுசு கார் ஒன்று நீதிபதியின் கார் மீது பயங்கரமாக மோதியது. இதுகுறித்து கவுசாம்பி மாவட்ட போலீசில் நீதிபதி புகார் அளித்தார்.

அதில், குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதால், அவர் தன்னை மிரட்டினார் என்றும் இந்த விபத்து அதன் காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகம் உள்ளதாகவும் கூறியிருந்தார்.

கடந்த புதன்கிழமை ஜார்கண்ட் மாநிலத்தில், ஜாக்கிங் சென்ற மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த நீதிபதியின் புகார் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்த புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட போலீசார் விசாரணையில் இறங்கினர். விபத்து ஏற்படுத்திய காரையும் அதன் உரிமையாளரிடமும் விசாரித்தனர். பின்னர் பிராயக்ராஜ் ஐ.ஜி, கே.பி.சிங் கூறும்போது, இது விபத்துதான். விசாரித்தவரையில் இதற்கு பின் சதி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.