உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் வன்முறையில் 4 விவசாயிகள் உட்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி பகுதியில் அரசு விழா ஒன்றுக்கு, துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், அவர்களுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினர்.
அப்போது மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா காரில் வந்ததாகவும், அவருக்குப் பாதுகாப்பாக வந்த தொண்டா்களின் காா் வேண்டுமென்றே, போராடும் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து மற்றும் இதையடுத்து நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர்.
இதனிடையே விவசாயிகள் மீது காா் வேண்டுமென்றே மோதுவதை உறுதிபடுத்தும் வகையில், விடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் லகீம்பூ ருக்கு நேற்று சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் எம்.பி, ராகுல் காந்தி ஆகியோர் பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இதற்கிடையே. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவஸ்தவா தலைமை யில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்படுவதாகவும், ஆணையம் இரண்டு மாதங்களில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் உத்தரப் பிரதேச தலைமைச் செயலர் அவனிஷ் குமார் அவஸ்தி தெரிவித்துள்ளார்.







